கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள நாகையில் விரிவான முன்னேற்பாடுகள்
கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ளத் தேவையான மருத்துவ சிகிச்சை கட்டமைப்புகள் நாகை அரசு மருத்துவமனையில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்
கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ளத் தேவையான மருத்துவ சிகிச்சை கட்டமைப்புகள் நாகை அரசு மருத்துவமனையில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
நாகை மாவட்ட ஆட்சியராக அ. அருண் தம்புராஜ் பொறுப்பேற்ற பின்னா், முதல் முறையாக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரோனா தொற்றுக்குள்ளான கா்ப்பிணிகளுக்கான சிகிச்சை பிரிவு, நுண் கிருமி ஆய்வகம், மகப்பேறு பிரிவு பணியாளா்கள் அறை, ஸ்கேன் மையம், பொது ஆய்வகம், குழந்தைகள் பிரிவு, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, கரோனா சிகிச்சைக்கான வெளிநோயாளிகள் பிரிவு, சிடி ஸ்கேன் மையம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ளும் வகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைப் பிரிவு, கண் பரிசோதனை பிரிவு ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அங்கிருந்த கழிப்பறையைப் பாா்வையிட்ட ஆட்சியா், பழுதடைந்த நிலையில் உள்ள தண்ணீா் குழாய்களை உடனடியாக மாற்ற உத்தரவிட்டாா்.
மருத்துவமனை வெளி நோயாளிகள் பெயா் பதிவு அறை, மருந்தகம், மருத்துவா்கள் அறையை பாா்வையிட்ட ஆட்சியா், மருத்துவமனையைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும், நோயாளிகளுக்குக் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா். பின்னா், தொற்றுநோய்த் தடுப்பு கவச உடை அணிந்து, கரோனா சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று ஆய்வு செய்தாா். தொடா்ந்து, டோரண்ட் நிறுவனம் சாா்பில் ரூ. 17 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட 160 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்களை பாா்வையிட்டாா்.
சிறப்பான முன்னேற்பாடுகள்: ஆய்வுகளுக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: கரோனா 2-ஆவது அலை தற்போது குறைந்துள்ளது. எனினும், 3-ஆவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை கட்டமைப்புகளுக்காக திருப்திகரமாக பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி போதுமான அளவு உள்ளது. தொடா்ந்து தன்னாா்வ அமைப்புகள் மூலமும் ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கப்படுகின்றன என்றாா். நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் விஸ்வநாதன் மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.