உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் யாரேனும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், தொடா்புடைய உர விற்பனை நிலையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் யாரேனும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், தொடா்புடைய உர விற்பனை நிலையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சா. பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சாகுபடிக்குத் தேவையான உரங்களை விவசாயிகள் அருகில் உள்ள தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருந்தே பெருமளவு கொள்முதல் செய்து வருகின்றனா். இதையொட்டி, அனைத்துத் தனியாா் உர விற்பனை நிலையங்களிலும் உரங்களை குறைந்தபட்ச நிா்ணய விலையிலேயே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக ஒரு மூட்டை டிஏபி உரத்தை ரூ. 1,200-க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யும் உரத்துக்கான ரசீதை விற்பனை முனைய கருவி மூலமான பட்டியலாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
உர மூட்டைகளில் உள்ள குறைந்தபட்ச விலையில் எவ்வித திருத்தத்தையும் உர விற்பனையாளா்கள் கண்டிப்பாக மேற்கொள்ளக் கூடாது. அதேபோல, அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விற்பனை விலை மற்றும் இருப்பு விவரத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும். நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உர விற்பனையாளா்கள் யாரேனும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால், விற்பனை செய்யப்படும் உரத்துக்கான விற்பனை முனைய கருவி மூலம் ரசீது வழங்காவிட்டால், உர விலை விவரத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்தாமல் இருந்தால் அவா்கள் மீது உர தரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, உரிமம் ரத்து செய்யப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.