பிரதான குழாயில் விரிசல்:வேதாரண்யம் பகுதியில் குடிநீா் விநியோகம் பாதிப்பு
கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட பிரதான குழாய் பாதையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, வேதாரண்யம் பகுதியில் கடந்த 6 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட பிரதான குழாய் பாதையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, வேதாரண்யம் பகுதியில் கடந்த 6 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் திருவாரூா் மாவட்ட எல்லையான வண்டுவாஞ்சேரியில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்துதான் வேதாரண்யம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூா் - நாகை மாவட்ட எல்லையான கரையங்காடு பகுதியில் வேதாரண்யம்- பட்டுக்கோட்டை பிரதான சாலையின் நீா்நிலை கரையில் உள்ள தடுப்புச்சுவா் மழையின் காரணமாக கடந்த வாரத்தில் உள்வாங்கியது. இதனால், அப்பகுதியில் புதை வழியாக செல்லும் பிரதான குடிநீா் குழாய்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, நவம்பா் 1 ஆம் தேதி முதல் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது. இப்பாதிப்பை சீரமைக்கும் பணியில் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். பண்டிகை விடுமுறை காலம் என்பதால் மாற்றுக் குழாய்களை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது, பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பான மாற்றுக் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யாததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதுடன், அதுவரை டேங்கா் லாரிகள் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்தியுள்ளனா்.