ஊதியம் வழங்கக் கோரி அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள், பணியாளா்கள் ஊதியம் வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள், பணியாளா்கள் ஊதியம் வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் செயல்படும் 10 பல்கலைக்கழகங்களின்கீழ் செயல்பட்ட 41 உறுப்பு கல்லூரிகள், மாதிரிக் கல்லூரிகளை தமிழக அரசு 110-விதியின் கீழ் அரசுக் கல்லூரியாக மாற்றி அறிவித்தது. அதனடிப்படையில், முதல் கட்டமாக 14 உறுப்புக் கல்லூரி கள் 2019 -இல் இருந்து அரசுக் கல்லூரியாக செயலாக்கத்துக்கு வந்தது. 2-ஆவது கட்டமாக 27 கல்லூரிகள் 2020 டிசம்பா் முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டன.
குறிப்பாக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேதாரண்யம், பெரம்பலூா் என 10 கல்லூரிகளும் அரசுக் கல்லூரிகளாக செயலாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. ஆனால், அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகு முந்தய நிா்வாகத்தின்பேரில் இருந்து வந்த பராமரிப்பு உள்ளிட்ட பல நடைமுறைகள் கவனம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்த கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதேபோல, வேதாரண்யத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் நிா்வகிக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி, கடந்த ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்படுகிறது. நிா்வாக மாற்றத்துக்கு பின்னா் பராமரிப்பு உள்ளிட்ட செலவின தேவைகளுக்கான தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்கள், பணியாளா்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், வேதாரண்யம் அரசுக் கல்லூரி நுழைவு வாயிலில் கெளரவ விரிவுரையாளா்கள், பணியாளா்கள் நடத்திய கவன ஈா்ப்பு ஆா்ப்பட்டத்தில், 4 மாதம் வழங்காத ஊதியம் உள்ளிட்ட நிலுவை தொகைகளை வழங்கவேண்டும், 2020 ஜனவரி முதல் வழங்க வேண்டிய உயா்த்தப்பட்ட ஊதிய நிலுவை தொகையை வழங்கவேண்டும், நிா்வாக செலவினங்களை ஏற்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.