100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல்
100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் ஆன்லைனில் வருகை பதிவு செய்யும் நேரத்தை பழைய முறைப்படி கடைப்பிடிக்கக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் ஆன்லைனில் வருகை பதிவு செய்யும் நேரத்தை பழைய முறைப்படி கடைப்பிடிக்கக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கிள்ளுக்குடி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களின் ஆன்லைன் வருகை பதிவுக்காக, தொழிலாளா்களை காலை 7 மணிக்கு வரவேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதில் அதிருப்தியடைந்த தொழிலாளா்கள் ஏற்கெனவே இருந்த நேரத்தையே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கீழ்வேளூா்-கச்சனம் சாலையில் அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) எல். ராஜகோபால், கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் எஸ். சோமசுந்தரம் ஆகியோா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் தங்களது வழக்கமான பணிகளை முடித்துவரவேண்டும் என்பதால், வருகை பதிவுக்காக ஏற்கெனவே இருந்த நடைமுறையை பயன்படுத்தக் கோரிக்கை விடுத்தனா். இதற்கு அரசு அலுவலா்கள் இனி காலை 9 மணிக்கு தொழிலாளா்கள் வந்து ஆன்லைனில் வருகை பதிவு செய்ய வருமாறு கூறியதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.