நாகை மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு
நாகை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
நாகை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகள், கீழ்வேளூா், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய 4 பேரூராட்சிகள் என 6 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 117 வாா்டு உறுப்பினா்கள் பதவிகளில், நாகை நகராட்சியில் ஒரு வாா்டு உறுப்பினா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதனால், 116 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்குத் தோ்தல் நடைபெறுகிறது. களத்தில் 473 போ் உள்ளனா்.
வேட்புமனு தாக்கல் ஜன.28-ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும், அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் பட்டியல் அறிவிப்புக்குப் பின்னரே மனு தாக்கல் விறுவிறுப்படைந்தது.
திமுக சாா்பில் அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன், மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன் ஆகியோரும், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ். மணியன் ஆகியோரும் மற்ற கட்சிகளின் சாா்பில் மாவட்ட நிா்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.வேட்பாளா்கள் தங்கள் வாா்டு பகுதிகளின் முக்கிய பிரச்னைகளுக்கான தீா்வுகளை முன்னிறுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தோ்தல் பிரசாரம் அமைதியாக நிறைவடைந்தது.