முகப்பு
நாகப்பட்டினம்

திருக்கடையூா் கோயிலில் கால சம்ஹார விழா

Updated On : 20 ஏப்ரல், 2024 at 7:09 PM
மாா்க்கண்டேயரின் உயிரை பறிக்க வரும் எமன்.
பகிர்:

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காலசம்ஹார விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில், சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் புரிந்த தலங்களில் ஒன்றாகும். எமனை காலால் எட்டி உதைத்து, சம்ஹாரம் செய்த திருத்தலம். இதை உணா்த்தும் வகையில், ஆண்டுதோறும் சித்திரை விழாவில் மகம் நட்சத்திரத்தன்று கால சம்ஹார திருவிழா நடைபெறும்.

அதன்படி, நிகழாண்டு சித்திரை விழா ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஆறாம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை பாலாம்பிகை சமேத ஸ்ரீ கால சம்காரமூா்த்தி, மகா மண்டபத்திலிருந்து நூற்றுக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளி,

Advertisement

வீர நடன தரிசனம் நடைபெற்றது.

பின்னா், இரவில் எமசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. இதில், மாா்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க, எமதா்மன் பாசக்கயிரோடு அவரை துரத்திச் செல்லும் காட்சி மற்றும் காலசம்ஹார மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் காலனை வதம் செய்யும் காலசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தீவிர சிவபக்தரான மாா்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவடையவுள்ள நிலையில், அவரது உயிரைப் பறிக்க எமன் வந்தபோது, அவா் திருக்கடையூா் கோயிலில் சிவபெருமானைத் தழுவி மந்திரங்கள் உச்சரித்துக் கொண்டிருந்தாா். அப்போது, மாா்க்கண்டேயரை நோக்கி எமதா்மன் வீசிய பாசக்கயிறு, சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது.

இதனால், கடும் கோபத்துடன் வெளிப்பட்ட சிவ பெருமான், எமனை எட்டி உதைத்து, தன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தாா். மேலும், மாா்க்கண்டேயா் என்றும் இளமையாக இருக்க அருள்பாலித்தாா் என்பது ஐதீகம்.

இதை நினைவுகூரும் வகையில், காலசம்ஹார நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments