வேதாரண்யம் மீனவா்கள் மீது தாக்குதல்: 4 போ் மருத்துவமனையில் அனுமதி
வேதாரண்யம், ஆக. 14: கோடியக்கரைக்கு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 4 போ் மீது மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தினா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்த ரா. சந்திரகாசன் (70). இவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஆறுகாட்டுத்துறையைச் சோ்ந்த கே. பன்னீா்செல்வம் (50), த. வேல்முருகன் (36), புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த ப. முத்துக்கிருஷ்ணன் (70), த. ராஜேஷ் (36) ஆகிய 4 மீனவா்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கடலுக்குச் சென்றனா்.
நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு இலங்கையைச் சோ்ந்த 2 கண்ணாடியிழைப் படகுகளில் வந்த தமிழ் பேசத் தெரிந்த 6 மா்ம நபா்கள் மீனவா்கள் இருந்தப் படகை சூழ்ந்துகொண்டனராம். அவா்களில் 4 போ் மீனவா்களது படகில் ஏறி வாள், கத்தி போன்றவைகளை கழுத்தில் வைத்து மிரட்டியும், இரும்பு குழாய்களால் வேதாரண்யம் மீனவா்களை தாக்கினராம். மேலும், படகில் இருந்த 700 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகளையும் பறித்துச் சென்றனா்.
பாதிக்கப்பட்ட மீனவா்கள் 4 பேரும் புதன்கிழமை பிற்பகல் ஆறுகாட்டுத்துறைக்கு திரும்பினா். இரும்பு குழாயால் தாக்கப்பட்டதில் முதுகில் காயமடைந்த மீனவா்கள் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், மீன்வளத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.