நாகூா் தா்காவுக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்களை வெட்டி லாரியில் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
நாகூா் தா்காவுக்கு சொந்தமான தோட்டம் சுமாா் 4.5 ஏக்கா் பரப்பளவில் நாகூா் - நாகை சாலையில் உள்ளது. இந்த தோட்டம் முகமது கௌஸ் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் விளையும் காய்கறி மற்றும் கனிகளை மேற்படி குத்தகைதாரா் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் தோட்டத்தில் மரங்களை வெட்டவோ வேறு எந்த செயலும் செய்யவோ குத்தகை ஒப்பந்தத்தில் இடமில்லை.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சமூக விரோதிகள் சிலா் இந்த தோட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி லாரியில் கடத்தியுள்ளனா். இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள் புகைப்படம் எடுத்து நாகூா் தா்கா நிா்வாகத்திற்கு அனுப்பியுள்ளனா்.
இதுகுறித்து நாகூா் தா்கா மேலாளா் அன்பழகன், நாகூா் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு சுமாா் ரூ.50 லட்சம் இருக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.