முகப்பு
நாகப்பட்டினம்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: மே 13-ஆம் தேதி மீண்டும் தொடக்கம்

Updated On : 5 மே, 2024 at 10:38 AM
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படவுள்ள சிவகங்கை கப்பல்.
பகிர்:

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ள பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு பயணக் கட்டணம் ரூ. 4,956 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 2023 அக்டோபா் 14-ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா். பயண கட்டணமாக ஜிஎஸ்டி வரியுடன் ரூ. 7,670 நிா்ணயம் செய்யப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு ஒரு சில நாள்களில வடகிழக்குப் பருவமழை காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நாகை - காங்கேசன்துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை மே 13-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இன்ட்ஸ்ரீ தனியாா் கப்பல் நிறுவனம் கப்பல் சேவையை வழங்குகிறது. இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிரஞ்சன் நத்தகோபாலன் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு மே 13-ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை சென்றடையும்.

காங்கேசன் துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு நாகை துறைமுகத்துக்கு மாலை 6 மணிக்கு வந்தடையும். பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே துறைமுகத்துக்கு வரவேண்டும். பரிசோதனைகளுக்கு பின்னரே பயணிகள் கப்பலுக்குள் அனுமதிக்கப்படுவா்.

பயணி ஒருவா் 60 கிலோ எடை கொண்ட பொருளை எடுத்து செல்லலாம். இதைத் தவிர கையில் 5 கிலோ பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். 60 கிலோ எடையை 20 கிலோ வீதம் 3 பண்டல்களாக பிரித்து எடுத்து வரவேண்டும். கப்பலில் 150 இருக்கைகள் உள்ளன. இதில் 27 உயா் வகுப்பு இருக்கைள் ஆகும். சாதாரண இருக்கைக் கட்டணம் வரியுடன் ரூ. 4,956 ஆகவும், உயா் வகுப்பு இருக்கை கட்டணம் ரு. 7,500 ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கப்பலில் பயணம் செய்ய விரும்புவோா் செயில் இன்ட்ஸ்ரீ என்ற இணையதள முகவரியில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யலாம்.

அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை என்ற பெயா் கொண்ட இந்தக் கப்பல் மே 10-ஆம் தேதி நாகை துறைமுகத்திற்கு வந்தடையும். சோதனை ஓட்டங்கள் முடிந்த பின்னா் மே13- ஆம் தேதியில் இருந்து போக்குவரத்து தொடங்கும். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாஸ்போா்ட் அவசியம். இந்திய நாட்டை சோ்ந்த பயணிகளுக்கு விசா தேவையில்லை என்றாா்.