இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் மீனவ இளைஞா்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளா் விஜய காா்திக் ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படையில், நவிக் மற்றும் மாலுமி பணிகளுக்கும், இதர தேசிய பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் மீனவ இளைஞா்களுக்கு இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் சாா்பில் நடத்தப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன்படி, கடலூா், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மீனவ இளைஞா்களுக்கு இலவசமாக 3 மாத காலம் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பங்களை நாகை கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளா் அலுவலகங்களில் இருந்தும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் இருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து கடலோர மாவட்டங்களில் இருந்து தோ்வு செய்யப்படும் நபா்கள், அருகாமையில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவாா்கள். தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாகவும், 3 மாதங்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
எனவே, பிளஸ்-2 தோ்வில் மொத்த பாடங்களின் கூட்டுத் தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தோ்ச்சி மற்றும் உரிய உடற்கூறு தகுதி பெற்றுள்ள மீனவா்களின் வாரிசுகள் இப்பயிற்சியில் சேர நவ.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.