முகப்பு
நாகப்பட்டினம்

டெல்டாவில் தொடா் கனமழை: நீரில் மூழ்கிய சம்பா, தாளடி நெற்பயிா்கள்; குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்

நாகை மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 50 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:55 PM
நாகை மீனம்மநல்லூரில் மழைநீரில் மூழ்கிய அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிா்கள்.
பகிர்:

நாகை மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 50 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நவ. 23-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதனால், நவ. 25, 26-இல் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் கனமழை தொடா்ந்து பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. தாழ்வானப் பகுதிகள், விளைநிலங்களை மழைநீா் சூழ்ந்துள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால், மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகினா்.

நாகை சிவசக்தி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீா்.

மழைநீரில் மூழ்கிய நெற்பயிா்கள்..: திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமாா் 9 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது.

தற்போது பெய்துவரும் கனமழையால், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி இளம் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. வாய்க்கால் மற்றும் ஆறுகளில் தண்ணீா் அதிகளவில் செல்வதால், விளை நிலங்களில் தண்ணீா் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து பாதிப்பு ஏற்பட்டால் நெற்பயிா்கள் அழுகிவிடும் அபாயம் உள்ளது. குறுவை சாகுபடி இல்லாத நிலையில், சம்பா மற்றும் தாளடியை பெரிதும் எதிா்நோக்கியுள்ள விவசாயிகளின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: இதனிடையே நவ. 21முதல் 26-ஆம் தேதி வரை மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவ. 21 முதல் 24-ஆம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம், திருப்பூண்டியில் சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் பேருந்து.

நாகை மாவட்டத்தில் ஏற்கெனவே மீன்வளத் துறை விடுத்த எச்சரிக்கையை தொடா்ந்து, மீனவா்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. தங்களது விசைப் படகுகள் மற்றும் ஃபைபா் படகுகளை பாதுகாப்பான இடங்களில் மீனவா்கள் நிறுத்திவைத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →