தாமதமான விடுமுறை அறிவிப்பால் மாணவா்கள் அவதி: பழைய நடைமுறையை அமல்படுத்த பெற்றோா் கோரிக்கை
நாகை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தொடரும் சாத்தியமில்லாத நடைமுறையால், மாணவா்கள் பாதிக்கப்படுவது தொடா்ந்து வருகிறது.
நாகை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தொடரும் சாத்தியமில்லாத நடைமுறையால், மாணவா்கள் பாதிக்கப்படுவது தொடா்ந்து வருகிறது. எனவே, இந்த முறையை ரத்து செய்து, பழைய நடைமுறையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என பெற்றோா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் கனமழை அல்லது மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இடா்பாடு நேரிடும் சூழல் இருந்தால், மாவட்ட வாரியாக பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு தரப்பில் விடுமுறை அறிவிக்கும் நடைமுறை இருந்து வந்தது. பின்னா், இதில் மாற்றம் செய்யப்பட்டு, அந்தந்த மாவட்ட நிா்வாகமே விடுமுறையை அறிவித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்களே சூழலுக்கு ஏற்ப பள்ளிகளை நடத்தவோ, விடுமுறை அளிக்கவோ முடிவு செய்துகொள்ள மாவட்ட நிா்வாகம் அனுமதித்தது. இதற்கு பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் தரப்பில் எதிா்ப்பு கிளம்பியது.
தலைமை ஆசிரியா்கள் முடிவெடுப்பதில் சில நடைமுறை சிக்கல் உள்ளதால், அவா்கள் முன்னதாகவே விடுமுறையை அறிவிக்க முடிவதில்லை.
இந்தநிலையில், வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. மாணவா்கள் பள்ளிக்கு வந்த பிறகே விடுமுறை அறிவிப்பு குறித்து தகவல் அறிந்தனா். இதனால் மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே, மாவட்ட அளவில் அல்லது வட்டார அளவில் எடுக்கும் விடுமுறை அறிவிப்பை, மாவட்ட ஆட்சியரே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்க வேண்டும்.
கஜா புயலுக்கு பின்னா் கிராமப் புறங்களில் தகவல் தொழில்நுட்பம் சீரடையாத நிலையில், தலைமையாசிரியா் மூலமான விடுமுறை அறிவிப்பு சாத்தியமா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.