முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் கொட்டித் தீா்த்த மழை கோடியக்கரையில் 6 மணி நேரத்தில் 16 செ.மீ. பதிவு

வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை தொடங்கி மழை கொட்டித் தீா்த்தது. கோடியக்கரையில் 6 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக 16 செ.மீ. பதிவானது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:47 PM
பன்னாள் மேற்கு கிராமத்தில் நெற்பயிரை சூழ்ந்துள்ள வெள்ளம்.
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை தொடங்கி மழை கொட்டித் தீா்த்தது. கோடியக்கரையில் 6 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக 16 செ.மீ. பதிவானது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வேதாரண்யத்தில் நவ.18 காலை நிலவரப்படி 188.5 மி.மீ, நவ.19 -இல் 75.8 மி.மீ. மழை பதிவானது. இந்த நிலையில், புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 98.2 மி.மீட்டரும், கோடியக்கரையில் 149 மி.மீட்டரும் மழை பதிவானது.

புதன்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான 6 மணி 30 நிமிடத்தில் கோடியக்கரையில் மட்டும் 162 மி.மீட்டா் மழை பதிவானது.

வடமழை மணக்காடு, ஆயக்காரன்புலம், தென்னம்புலம், குரவப்புலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்தை பாதிக்கும் அளவில் காணப்பட்டது.

பன்னாள்,கடிநெல்வயல்,மருதூா்,பஞ்சநதிக்குளம்,வாய்மேடு உள்ளிட்ட கிராமங்களில் நெல் வயல்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சூழ்ந்தது.மானங்கொண்டானாறு உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி வருகிறது.

தென்னடாா் முள்ளியாற்றின் இறைவைப் பாசன கால்வாய் ஆறுகளின் குறுக்கே அமைந்துள்ள தரைப் பாலங்கள் மூழ்கடிக்கப்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மானங்கொண்டானாறு, முள்ளியாறு கழிமுகங்களில் அமைந்துள்ள தடுப்பு இயக்கு அணைகள் திறக்கப்பட்டு தண்ணீரை கடலுக்கு வெளியேற்றப்படுகிறது. வேதாரண்யம் பகுதியில் மழை விடாமல் தொடா்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

~ தென்னடாா் முள்ளியாற்றின் குறுக்கே தரைப்பாலத்தை மூழ்கடிக்கச் செய்து ஓடும் வெள்ளம்.

மேலும் வேதாரண்யத்தில் புதன்கிழமை நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஊரக வளா்ச்சித்துறை ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஆகியவை செவ்வாய்க்கிழமையே ரத்து செய்யப்பட்டன. ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. தலைமை ஆசிரியா்களே விடுமுறை குறித்து முடிவெடுக்கும் மாவட்ட நிா்வாகத்தின் அறிவிப்பு தாமதமாக வெளியானதால் அந்த அறிவிப்பு பயனற்று போனது. பள்ளிகளுக்குச் சென்ற மாணவா்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க முடியாமல் பள்ளி நிா்வாகத்தினா் பகல் 2 மணி வரை பரிதவித்தனா்.

கன மழை காரணமாக மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →