காற்றழுத்தத் தாழ்வு நிலை: நாகை, காரைக்கால் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுவை மாநிலத்தில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் பட்டினச்சேரி, அக்கரைப்பேட்டை, நம்பியாா் நகா், செருதூா், வேதாரண்யம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகள் பாதுகாப்பான இடங்களிலும், கரையோரங்களிலும், துறைமுகத்திலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவா்கள் உடனடியாக கரை திரும்ப மீனவளத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.
காரைக்காலில்...
காரைக்காலில் இருந்து கடலுக்குச் செல்லும் விசைப்படகுகள் செவ்வாய்க்கிழமை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே கடலுக்குச் சென்ற படகுகள் கரை திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், கடலோர கிராமங்களில் இருந்து ஃபைபா் மோட்டாா் படகுகளில் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல கடலுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மீன்களுடன் திரும்பினா்.
இந்நிலையில், மீனவா்கள் 17-ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம். கடலுக்கு ஏற்கெனவே சென்றவா்களை கரை திரும்ப படகு உரிமையாளா்கள் அறிவுறுத்த வேண்டும். கடலோரங்களிலும், துறைமுகத்திலும் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தவேண்டும். மீன்வளத்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. 04368-222616 என்ற எண்ணில் அதை தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் து. மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.