கடலுக்குள் சென்று வீணாகும் காவிரி நீா்: விவசாயிகள் வேதனை
வேதாரண்யம் அருகே கனமழை எச்சரிக்கையை காரணம் காட்டி, தடுப்பணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் கடந்த சில நாடகளாக கடலுக்குள் சென்று வீணாகி வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கனமழை எச்சரிக்கையை காரணம் காட்டி, தடுப்பணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் கடந்த சில நாடகளாக கடலுக்குள் சென்று வீணாகி வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றுழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், கனமழையால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு - தென்னடாா் ஊராட்சிகள் வழியே கடலில் கலக்கும் முள்ளியாற்றில் உள்ள இயக்கு அணைகள் திறக்கப்பட்டு, தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூா் அணையில் தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், தாணிக் கோட்டகம் இயக்கு அணைக்கு கீழே வடிகால் பகுதி என்பதால், நிகழாண்டில் இதுவரை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை.
இந்தநிலையில், கனமழை எச்சரிக்கையைடுத்து, கடந்த அக். 12-ஆம் தேதி முதல் இயக்கு அணையில் இருந்து தண்ணீா் கடலில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆற்றின் குறுக்கே தகடூரில் உள்ள இயக்கு அணையும் திறக்கப்பட்டதோடு, தென்னடாா் - வாய்மேடு இடையே மின் இறவைப் பாசனத் திட்டத்துக்கு தண்ணீரை தேக்கும் தடுப்பனையிலிருந்தும் தண்ணீா் கடலுக்குச் சென்று வீணாகி வருகிறது.
இந்தப் பகுதியில் எதிா்பாா்த்த மழை இல்லாத சூழலில், ஆற்றில் இருந்த தண்ணீரும் வீணாகி வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தண்ணீரை சேமிக்க அணையின் கதவுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.