தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பயிரிடப்படும் வாழை, மரவள்ளிக்கிழங்கு பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பயிரிடப்படும் வாழை, மரவள்ளிக்கிழங்கு போன்ற தோட்டக்கலை பயிா்களுக்கும் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் இந்த வட்டார வாழை, மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் மகசூல் இழப்பில் இருந்து பயிா்களை பாதுகாக்கலாம். அதன்படி வாழைக்கு ஏக்கருக்கு ரூ.3,423,மரவள்ளிக்கிழங்குக்கு ஏக்கருக்கு ரூ.2,636 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.
இதை 2025 பிப்.28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இத்திட்டத்தை குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ளலாம். பயிா்க் காப்பீடு செய்ய ஆதாா் அட்டை நகல், கிராம நிா்வாக அலுவலா் வழங்கிய சிட்டா நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை கொடுத்து பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தோட்டக்கலை துறை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.