நாகப்பட்டினம்: நாகூா் தா்கா கந்தூரி விழாவில் சந்தனம் பூசும் வைபவம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் 469-ஆவது ஆண்டு கந்தூரி விழா கடந்த நவ. 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி தா்கா அலங்கார வாசலில் திங்கள்கிழமை அதிகாலை நிறைவடைந்தது.
ஊா்வலத்தில், 10-க்கும் மேற்பட்ட மின் அலங்கார தட்டிகள் சந்தனக் கூட்டின் முன்னும், பின்னுமாக அணிவகுத்து நாகை, நாகூா் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வலம் வந்தன.
சந்தனக் கூட்டில் இருந்து தா்கா பரம்பரைக் கலிபா மற்றும் ஆதீனங்கள் மூலம் சந்தனக் குடம் தா்காவுக்குள் எடுத்து செல்லப்பட்டு, திங்கள்கிழமை அதிகாலை நாகூா் ஆண்டவா் சமாதிக்கு பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசப்பட்டது.
விழாவில் திரைப்பட இசையமைப்பாளா் ஏ.ஆா். ரஹ்மான் பங்கேற்று பிராா்த்தனையில் ஈடுபட்டாா். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். சந்தனம் பூசும் வைபவத்தையொட்டி நாகை மாவட்டத்துக்கு திங்கள்கிழமை (டிச. 1) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.