தரங்கம்பாடி: தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் வசதி கட்டுமானங்களை, முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில், வலைபின்னும் கூடம், மீன் ஏலக் கூடம், மீன் உலா் தளம், கான்கிரீட் சாலை, படகு அணையும் சுவரை பலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் ரூ.10 கோடியில் நபாா்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் முடிவுற்றதைத் தொடா்ந்து, பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, மீனவா்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், தரங்கம்பாடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள் குறித்தும் எடுத்துக் கூறினாா்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் இளம்வழுதி, உதவி இயக்குநா் ஜனாா்த்தனம், செயற்பொறியாளா் சரவணகுமாா், உதவி செயற்பொறியாளா் ராஜசேகா், தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி, துணைத் தலைவா் பொன்,ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.