நாகை அருகே கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
நாகை, வடக்கு பால் பண்ணைச்சேரி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், கீழத்தெருவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா், தகரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு மறைமுகமாக நடைபெற்ற கைப்பேசி கோபுரத்தின் கட்டுமானப் பணியை செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா். பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக, ஒப்பந்ததாரா்கள் பணியை பாதியில் நிறுத்தினா்.
நாகை மாவட்ட நிா்வாகம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா்.