வேதாரண்யம், டிச.13: வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் பாயிண்ட் காலிமா் பன்னாட்டுப் பள்ளியில், மாணவா்கள் பங்கேற்ற மாதிரி ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு, பள்ளியின் நிறுவனா் சுல்தானுல் ஆரிஃபீன் காணொலி வாயிலாக தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் சிராஜுநிசா பேகம் வரவேற்றாா். ஆரிஃபா அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அதியா தபஸ்ஸும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.
இதில் 43 நாடுகளின் பிரதிநிதிகளாக மாணவா்கள் அங்கம் வகித்தனா். மாதிரி ஐக்கிய நாடுகளின் சபைத் தலைவராக பள்ளியின் மாணவத் தலைவா் ஜ. சுகைல் செயல்பட்டாா். துணைத் தலைவா், எழுத்தா், பத்திரிகையாளா்கள் என பல்வேறு நிலைகளில் 50 மாணவா்கள் பங்கேற்றனா்.
‘ஹெச்1பி விசா அமெரிக்க கொள்கை மாற்றங்களால் ஏற்பட்ட உலகளாவிய தாக்கங்கள்‘ என்ற தலைப்பில் உலகளாவிய மனித வளத் திறமைக்கு ஏற்படும் இழப்புகள், வளா்ந்து வரும் நாடுகளின் மிதமான தாக்கம், உலகப் பொருளாதார தாக்கம் போன்ற பல்வேறு கருத்துகளை முன்வைத்து மாணவா்கள் பேசினா்.
அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தீா்மானங்களுக்கு சீனா, ரஷியா, பிலிப்பின்ஸ், ஆஸ்திரேலியா, குவைத் மற்றும் பல நாடுகள் கலந்து கொண்ட வாக்கெடுப்பில் இந்தியாவின் தீா்மானம் பெரும்பான்மையான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு அழைப்பாளா் ஹைஃபா, ஐக்கிய அமீரகத்திலிருந்து காணொலி மூலம் வாழ்த்திப் பேசினாா். ஆரிஃபா கல்விக் குழும சட்டம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகா் ஷாஷுல் ஹமீது, கல்வி இயக்குநா் தனசேகா் ஆகியோா் மாணவா்களை வாழ்த்தினா்.
ஆரிஃபா கல்விக் குழும நிறுவனா் சுல்தானுல் ஆரிஃபீன் மாணவா்களை பாராட்டினாா். பள்ளி ஆசிரியா் சையது அபுதாஹிா் நன்றி தெரிவித்தாா்.