திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான மேஜைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பாராட்டினா்.
திருச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான மேஜைப் பந்து போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். நாகை மாவட்டம் சாா்பில் ரோஷன் மற்றும் குரோஷிக் ஆகியோா் பங்கேற்றனா். இரட்டையா் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் தேனி மாவட்ட மாணவா்களை வீழ்த்தி, நாகை மாவட்ட மாணவா்கள் முதல் பரிசு வென்றனா். இதையடுத்து அவா்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
17 வயதுக்குள்பட்ட மேசைப் பந்து போட்டியில், மாவட்டத்தில் முதல்முறையாக, மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவா்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டி, தொடா்ந்து தேசிய, சா்வதேசியப் போட்டிகளில் பங்கேற்று,சாதனை படைத்து மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட மேஜைப் பந்தாட்ட அகாதெமி தலைவா் பெலிக்ஸ், பயிற்சியாளா் மாா்ஷல் ஆகியோா் உடனிருந்தனா்.