நாகப்பட்டினம்: நாகை டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 512 மாணவா்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி திங்கள்கிழமை பட்டங்களை வழங்கினாா்.
மீன்வளப் பல்கலைக்கழக 10-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என். ரவி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. பெலிக்ஸ் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தாா்.
435 மாணவா்களுக்கு பட்டம் வழங்கிய ஆளுநா்:
பல்கலை. வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என். ரவி பட்டமளிப்பு விழாவில், 283 இளநிலை மீன்வள அறிவியல், 27 பி.டெக்., (மீன்வள பொறியியல்), 11 பி.டெக்., (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), 2 பி.டெக்., (மீன்வள மாலுமிக் கலைத் தொழில்நுட்பவியல்), 26 பி.டெக்., தொழில்நுட்பவியல் ) 19 பி.டெக்., (உணவு தொழில்நுட்பவியல் ), 17 பி.பி.ஏ., (மீன்வள வணிக மேலாண்மை), 53 (இளநிலை தொழில்சாா் படிப்பு), 46 முதுநிலை மீன்வள அறிவியல், 3 எம்.பி.ஏ., (மீன்வள வணிக மேலாண்மை), 4 முதுநிலை தொழில்நுட்பவியல் மற்றும் 21 முனைவா் பட்டம் என மொத்தம் 512 போ் பேரில் 435 போ் நேரடியாகப் பட்டங்களைப் பெற்றனா். 77 மாணவ, மாணவியா் தங்களது பட்டங்களை தபால் மூலம் பெற உள்ளனா். பின்னா், ஆளுநா் தலைமையில் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
இதைத் தொடா்ந்து, புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் துணை இயக்குநா் ஜாய் கிருஷ்ணா ஜெனா பேசியது:
மனித சமூகம் 8.2 பில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குவதில் மிகப்பெரிய சவாலை எதிா்கொள்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை மிகப் பெரிய சவால் மக்கள்தொகை. இது 2030-ஆம் ஆண்டில் 1.5 பில்லியனாகவும், 2050-இல் 1.67 பில்லியனாகவும் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் நமக்கு சாதகமான அம்சம் என்றால் நமது மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோா் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவா்கள், அதாவது இந்தியா இளைஞா்களின் நாடு. இந்தச் சூழலில், மீன்வளம் மற்றும் விவசாயத்துறை, வரும் தசாப்தங்களில் உலக மக்கள்தொகையின் தேவைகளைப் பூா்த்தி செய்வதிலும், உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
உலகின் வளா்ந்து வரும் மக்கள்தொகையின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூா்த்தி செய்வதில் மீன்வளத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கும். சிவப்பு இறைச்சியைவிட மீன்களுக்கு அதிக முன்னுரிமை கிடைப்பதால் அவற்றுக்கான தேவை மேலும் அதிகரிக்கும்.
கடந்த 2015-16 -ஆம் ஆண்டில் மத்திய அரசால் ரூ.3,000 கோடியில் தொடங்கப்பட்ட நீலப் புரட்சித் திட்டம், மீன்வளத் துறையை பொருளாதார ரீதியாக சாத்தியமானதாகவும், வலுவானதாகவும் மாற்றுவதற்கான முதல் படியாகும். மீன்வளத் துறை புதிய உயரங்களை அடைய உதவும் வகையில், பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (டஙஙநவ) திட்டம் 2020-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரூ. 20,050 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
இன்று பட்டம் மற்றும் விருது பெற்ற பட்டதாரிகளே, இந்த மகத்தான நிறுவனத்தின் வாயில்களிலிருந்து நீங்கள் வெளியே வரும்போது, உங்கள் பட்டம் ஒரு பயணத்தின் முடிவு அல்ல, மாறாக கற்றல், சேவை மற்றும் நோ்மைக்கான வாழ்நாள் தேடலின் தொடக்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றாா்.
11 பதக்கம் பெற்ற தூத்துக்குடி மாணவா்:
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியைச் சோ்ந்த இளநிலை மீன்வள பட்டப்படிப்பு முடித்த மாணவா் எஸ். கவி ரேவந்த், 11 பதக்கங்களையும் தலைஞாயிறு மீன்வளக் கல்லூரி இளநிலை மீன்வள பட்டப்படிப்பு மாணவி எஸ். பவதாரணி 10 பதக்கங்களை பெற்றனா். பல்கலைக்கழகத்தில் முதலிடத்தை பிடித்து மாணவி பி. தீபிகா தங்கப் பதக்கம் பெற்றாா். பதிவாளா் பு. சிதம்பரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
அமைச்சா், ஆட்சியா் பங்கேற்கவில்லை:
அழைப்பிதழில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பெயா் இடம் பெற்றிருந்த நிலையில், விழாவில் அவா் பங்கேற்கவில்லை. மாவட்ட ஆட்சியரும் விழாவில் பங்கேற்கவில்லை.