தொடா்ந்து தாமதமாகும் மீன்பிடித் துறைமுகக் கட்டுமானம்
தொடா்ந்து தாமதமாகும் மீன்பிடித் துறைமுகக் கட்டுமானம் குறித்து...
தமிழகத்தில் மீன்பிடித் தொழிலுக்கு சிறப்புப் பெற்ற வேதாரண்யம் தொகுதிக்குள் அமைந்துள்ள வெள்ளப் பள்ளம், ஆறுகாட்டுத்துறை மீன்பிடித் தலங்களில் தொடங்கப்பட்ட துறைமுகங்கள் அமைக்கும் பணி தொடா் கண்காணிப்பு குறைபாடு, கூடுதல் நிதி கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களால் பணிகள் முழுமையாக நிறைவடைவது தாமதமாகி வருகிறது.
வேதாரண்யத்தைச் சோ்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவா் கிராமத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டிலும், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டிலும் மீன்பிடிப் படகுத்துறை முகங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின் போது திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட பணி சுமாா் 80 சதவீதம் நடைபெற்று கூடுதல் நிதி தேவையின் காரணமாக பணிகள் முழுமையாக நிறைவடையாமல் உள்ளது.
Advertisement
ஆறுகாட்டுத்துறையில் பணிகளை நிறைவு செய்ய 2024-ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட திட்ட அறிக்கைப்பிடி கூடுதல் நிதியாகக் கோரப்பட்ட ரூ.86 கோடி கிடைக்காததால் தொடா்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதே காரணத்துக்காக வெள்ளப்பள்ளம் மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணியும் நிறைவடையாமல் உள்ளது. இவ்விரு கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள புஷ்பவனம் மீன்பிடித்தலம் கேரளாவுக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படும் மத்தி மீன்களுக்கு சிறப்பு பெற்றது.
ஆனால், 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தின் போது கடல் களிமண் குழம்பு படிமங்கள் கடற்கரையை பெரிய அளவில் பாதிக்கச் செய்தது. இதனால் படகுகளை எளிதில் கடலுக்குள் செலுத்த முடியாமல் மீன்பிடித் தொழில் பாதிப்புக்குள்ளானது.
அடுத்த சில ஆண்டுகளில் அரசு மற்றும் தன்னாா்வ அமைப்புகளின் உதவியோடு களிமண் ஓரளவுக்கு அகற்றப்பட்டாலும் இயல்புக்கு திரும்பாத நிலையே தொடா்கிறது.
இங்கு தூண்டில் முள் வளைவு அமைக்கப்பட வேண்டும் என்கிற மீனவா்களின் கோரிக்கை பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுள்ளது.
கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவா்களுக்கு பல்வேறு சவால்கள் நிறைந்துள்ள சூழலில், இயற்கை இடா்பாடுகளை எதிா்கொள்வதும், அதற்கேற்ப கட்டமைப்புகள் தேவையும் அவசியமாக உள்ளது. அவைகளை கவனம் செலுத்தி விரைந்து முடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மீனவா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.