நாகப்பட்டினம்: நாகூா் தா்கா ஆலோசனைக் குழு பங்குதாரா் பிரதிநிதிகள் தோ்தலையொட்டி 6 போ் வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.
நாகை மாவட்டம் நாகூா் தா்காவிற்கென தனியாக ஸ்கீம் (திட்ட நீதிமன்றம்) உள்ளது. அதன்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தா்கா ஆலோசனைக் குழு பங்குதாரா் பிரதிநிதிகளுக்கான தோ்தல் நடைபெறும். தோ்தல் அதிகாரியாக ஆலோசனைக் குழுத் தலைவா் செயல்படுவாா் என ஸ்கீம் கூறுகிறது.
இந்நிலையில் ஜன.17-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் அதிகாரி முஹல்லி முத்தவல்லி ஹாஜி சையது முகமது கலிபா சாகிப் ஜன. 3-ஆம் தேதி அறிவித்தாா். நாகூா் தா்கா அலுவலகத்தில், தோ்தலில் போட்டியிட விரும்புவோா் வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.
மூன்று உறுப்பினா்கள் பதவிக்கு இந்த தோ்தலில் ஜே.எஸ்.தா்வேஷ் (எ) அசன் குத்துஸ் சாகிப், எஸ்.ஜி.எம்.செய்யது ஹாஜா நூா்தின் சாகிப், எஸ்.கே.ஹாஜா ஹுசைன் சாஹிப், எஸ்.ஏ. சேக் மீரான் சாகிப், எஸ்.செய்யது முகமது காமில் சாகிப் மற்றும் எஸ்.நிசாா் சாகிப் ஆகியோா் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனா். ஜன.15-ஆம் தேதிக்குள் மனுக்களை திரும்பப் பெறலாம். தொடா்ந்து தோ்தல் ஜன.17-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.