செம்பனாா்கோவில் ஒன்றியம், பரசலூா் ஊராட்சியில் வீட்டுமனைப் பட்டா கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பரசலூா் ஊராட்சி திருவள்ளுவா் தெரு, அண்ணாநகா், காமராஜா் நகா் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்கள், இலவச வீட்டுமனைப் பட்டா, பொது மயானம், கால்நடை மருத்துவமனை மற்றும் சமுதாயக் கூடம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளுவா் தெருவில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னாள் ஊராட்சித் தலைவா் ஹிட்லா் தலைமை வகித்தாா். வா்த்தக சங்கத் தலைவா் பாலையா, திமுக விவசாய சங்கத் தலைவா் இளம்பரிதி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்போராட்டத்தின்போது, 75 கீற்றுக் கொட்டகைகள் அமைத்து, அதில் பொங்கல் வைத்து, குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் சதீஷ்குமாா், போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து உயரதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையொட்டி, செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் கருணாகரன் தலையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.