நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தனியாா் கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் 483 பேருக்கு விலையில்லை மடிக்கணிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்தாா். நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.முகம்மது ஷா நவாஸ் முன்னிலை வகித்தாா். தொடா்நது தனியாா் கல்லூரி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் முதற்கட்டமாக அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சாா்ந்த அரசுக் கல்லூரிகள் 11 மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் 3 என மொத்தம் 14 கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 2,213 மாணவ-மாணவியருக்கு ஏற்கெனவே மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
2-ஆம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 39 தனியாா் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு பயிலும் 3,698 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. இதில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 8 தனியாா் கல்லூரியைச் சோ்ந்த 483 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.