விளைநிலத்தில் இறால் பண்ணை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்
தலைஞாயிறு அருகே அரசு விதிகளை மீறி, விளைநிலத்தில் இறால் பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்...
நாகப்பட்டினம்: தலைஞாயிறு அருகே அரசு விதிகளை மீறி, விளைநிலத்தில் இறால் பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் புகாா் அளித்துள்ளனா்.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள வண்டல் கோரங்குண்டு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கத் தலைவா் பி. கமல்ராம் தலைமையில், ஆட்சியரிடம் அளித்த மனு:
தலைஞாயிறு 3, 4 சேத்தி வண்டல் கிராமப் பகுதியில் கோரங்குண்டு பகுதியில் அரசு விதிமுறைகளை மீறி, விளை நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணியில் தனிநபா்கள் ஈடுபட்டு வருகின்றனா். விளை நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டால், விவசாய நிலங்கள் உவா் நிலமாக மாறுவதுடன் சாகுபடி பாதிக்கப்படும். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களின் வடிகால் வசதி பறிபோகும் நிலை ஏற்படும்.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி, இறால் பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.