திருவாரூர்

புகையிலைத் தோட்டம் பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா ?

திருவாரூர் அருகே புகையிலைத் தோட்டம் பகுதியில் குப்பைத் தொட்டிகள், வடிகால் வசதி இல்லாததால், சாக்கடை மற்றும் குப்பைகள் தேங்கி, உருவாகியுள்ள சுகாதாரமற்ற சூழ்நிலையை மாற்ற

சி.ராஜசேகரன்

திருவாரூர் அருகே புகையிலைத் தோட்டம் பகுதியில் குப்பைத் தொட்டிகள், வடிகால் வசதி இல்லாததால், சாக்கடை மற்றும் குப்பைகள் தேங்கி, உருவாகியுள்ள சுகாதாரமற்ற சூழ்நிலையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாரூர் நகராட்சி 29-ஆவது வார்டுக்குள்பட்ட புகையிலைத் தோட்டம் குடியிருப்புப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அதிகம் உள்ள இக்குடியிருப்புகளுக்கு மத்தியில் காலி மனைகள் உள்ளன.
இப்பகுதியில் பிரதான சாலையும், அதிலிருந்து இருபுறத்தில் பிரியக்கூடிய 8 குறுக்கு சாலைகளும் உள்ளன. 2012-13 ஆம் நிதியாண்டில் 4 குறுக்கு சாலைகள் தார்ச் சாலைகளாக மாற்றப்பட்டன. மீதமுள்ள சாலைகளில் எவ்விதப் பணிகளும் செய்யாததால் அச்சாலைகள் மழைக் காலங்களில் சேதமடைகின்றன.
இப்பகுதியில், குப்பைத் தொட்டி வசதி, வீட்டுக் கழிவுநீர் செல்ல வடிகால் வசதியில்லை. இதனால், இப்பகுதி குடியிருப்புகளில் சேரும் குப்பைகள், காலி மனைகளில் கொட்டப்படுகின்றன. இந்நிலையில், காலி மனைகளில் தேங்கும் கழிவு நீரில் பிளாஸ்டிக் கழிவுகள், வீணான பொருள்கள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
அண்மையில் பெய்த மழையின்போது, குப்பைக் கழிவுகள் சாலையில் பரவி மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சாக்கடை கலந்த கழிவுநீராக இருப்பதால் இங்கு கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு நோய்களை உண்டாக்கி வருகிறது. மேலும், சாக்கடை உள்ள பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உடலில் கழிவு சேற்றுடன் சாலையில் நடமாடும் பன்றிகளால் மக்கள் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பெரும்பாலான வார்டுகளிலும் புதைச் சாக்கடை பணிகள் முடிவடைந்த நிலையில், இப்பகுதியில் எவ்வித பணிகளும் தொடங்கவில்லை என புகார் தெரிவிக்கும் பகுதி மக்கள், புதைச் சாக்கடைக்கான உரியத் தொகையை நகராட்சியில் செலுத்தியிருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து புகையிலைத் தோட்டம் குடியிருப்போர் தெரு நலச் சங்கத் தலைவர் எம். ராமகிருஷ்ணன் கூறியது:
இப்பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைத்து, நாள்தோறும் குப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும், கழிவுநீர் செல்ல புதைச் சாக்கடை பணிகளை நிறைவேற்ற வேண்டும், குடிநீர் வசதி இல்லாமல் பெரும்பாலானோர் சொந்த செலவில் அடி குழாய் அமைத்துள்ளதால், கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்றபோது, நிறுத்தப்பட்ட பணிகள் இதுவரை தொடங்கவில்லை. எங்கள் பகுதியில் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றார்.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொருளாளர் எஸ். பன்னீர்செல்வம் கூறியது: இங்கு வசிக்கும் குடும்பத்தினருக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பான்கார்டு, மின் பயனீட்டு கட்டண அட்டை ஆகியவற்றில் புகையிலை தோட்டம் என்று உள்ளது. ஆனால் நகராட்சி அலுவலகம் வழங்கும் வீட்டுவரி ரசீதுகளில் ரயில்வே காம்பெளண்ட் என்று உள்ளது. எனவே இப் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை பலமுறை மனுவாக அளித்துள்ளோம்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.நகர்ப்புறங்களை மட்டுமல்ல கடைகோடி பகுதிகளையும் சுத்தப்படுத்தினால்தான் தூய்மை இந்தியா சாத்தியமாகும். புகையிலைத் தோட்டம் பகுதியில் தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைத்து, கழிவுநீர் செல்ல வசதியாக வடிகால்கள் அமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின்
எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT