பழுதடைந்த நிலையில் பயன்பாட்டில் உள்ள மருதப்பட்டினம் ஒத்தைப் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் அருகே மருதப்பட்டினத்தில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே ஒத்தைப் பாலம் உள்ளது. கடந்த சுமார் 30 ஆண்டு களுக்கு முன்பு இப்பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பாலமானது மருதப்பட்டினம் பகுதியை நாகை-தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது. தவிர, கூத்தம்பாடி, இருவேலி, மொச்சக்குடி, பழவனக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாகப்பட்டினம், திருவிக கல்லூரி மற்றும் பிற இடங்களுக்கு செல்ல இப்பாலம் உதவியாக இருந்து வருகிறது. திருவாரூர் நகரத்துக்கு செல்ல வேண்டும் எனில், மருதப்பட்டினம் பகுதியிலுள்ள ரயில் பாதையை கடந்து செல்ல வேண்டும். ரயில்வே கேட்டில் சிக்காமல் இருக்க வாகன ஓட்டிகள் ஒத்தைப் பாலத்தை பயன்படுத்துவது வழக்கம்.
ஒத்தைப்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு ஓடம்போக்கியாற்றை கடந்து செல்ல மூங்கில் பாலம் அமைக்கப்பட்டிருந்துள்ளது. மழை, வெள்ளத்தின்போது மூங்கில் பாலம் அடிக்கடி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்ததை அடுத்து, இரும்பாலான பாலம் மக்கள் நடந்து செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டது. பாலம் அமைந்தபோது இருசக்கர வாகனங்கள் அதிகம் இல்லாமல் இருந்தது. தற்போது இருசக்கர வாகனங்களின் இயக்கம் அதிகமாக உள்ளதால் இந்த ஒத்தைப் பாலத்தில் வாகனங்களின் போக்குவரத்து அதிகமாகவுள்ளது. இருசக்கர வாகனங்கள் வரும்போது தனிநபர் நடந்து செல்ல முடியாத நிலையில் பாலம் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, பழுதான நிலையில் பயன்பாட்டில் உள்ள இந்த ஒத்தைப்பாலத்தை விரிவுப்படுத்தி, 108 ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வகையில் கட்டிக்கொடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
தற்போது பாலத்தின் கான்கிரீட் பிளேட்டுக்கும், இரும்புக் கம்பிகளுக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டு பாலம் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பாலத்தின் கீழ் பகுதியிலும், பாலத்தை தாங்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து நுனியளவு மட்டுமே தாங்கும் நிலையில் உள்ளது.
அதிக எடையுடன் வாகனங்கள் சென்றால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையில், அப்பகுதி மக்கள் பாலம் பழுது என அட்டையில் எழுதி, பாலத்தின் மேல்புறமும், பாலத்தில் பழுது ஏற்பட்ட இடத்திலும் தொங்க விட்டுள்ளனர். மேலும் சாக்பீசால் ஆங்காங்கே எழுதி வைத்துள்ளனர். ஆனாலும் வாகன ஓட்டிகள் இதைப் பொருட்படுத்தாமல் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூறியது: இப்பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இப்பாலம் பயனளிக்கிறது. பாலம் பழுதாகி ஆபத்தான நிலையில் இருக்கும் நிலையிலும், போக்குவரத்து தொடர்கிறது. தற்போதைய நிலையில், பாலத்தால் யாரும் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய பாலம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் கூறியது: மக்களின் நலன் கருதி இப்பாலத்தை சரிசெய்ய வேண்டும். இப்பகுதி கிராம மக்களின் அவசரத் தேவைக்கு 108 வாகனமோ, விசேஷ காலங்களில் வேன் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லும் வகையில் புதிய பாலம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்படவுள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் என்பதால், இந்த நேரத்தில் பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து, விரைவாக பாலத்தை புதுப்பித்தோ அல்லது வேறு பாலம் கட்டியோ தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஏனெனில், ஆற்றில் தண்ணீர் வந்தால், பிடிமானம் குறைந்த நிலையில் உள்ள பாலத்துக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம். அத்துடன் மழைக் காலங்களில் அவசர தேவைகளுக்கு மருத்துவமனைக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே பாலத்தை புதுப்பித்து தரவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.