திருவாரூர்

விவசாய கடன் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்

DIN

கஜா புயலால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமிழக விவசாயிகளின் விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, வடுவூர், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, கருவாக்குறிச்சி, இலக்கணாம் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதன்கிழமை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: கஜா புயல் தாக்குதலை பாதிப்பு என்று கூறுவதைவிட பேரழிவுக்கும் பேரழிவாக பார்க்க வேண்டும். இப்புயலால் விவசாயம், மண் என அனைத்தும் அழிந்துள்ளன. 
விவசாயத்துக்கு பதிலாக மாற்றுப்பயிர் என 30 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. நூற்றுக்கணக்கான தென்னை மரம் உள்ள தோப்பில், தற்போது ஒரே ஒரு தென்னை மரம் மட்டும் தான் நிற்கிறது. இந்த தோப்பின் மூலம் வரும் வருமானத்தை நம்பி  தென்னை தோப்புக்காரர்கள் மட்டும் அல்ல, அதை சார்ந்திருக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகளும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 
முகாமில், உள்ளவர்களுக்கு உணவு, பால், உடை  உள்ளிட்ட அத்தியாவாசியப் பொருள்கள் சென்றடையவில்லை. தன்னார்வ அமைப்பினர் வழங்கும் பொருள்களை கொண்டு அவர்கள் முகாமில் முடங்கி கிடக்கின்றனர். மத்திய அரசு இந்த புயலின் பாதிப்புகளை பேரிடர் பாதிப்புகளாக பார்க்கவில்லை.
கேரள வெள்ளப் பெருக்கின்போது, சேவ் கேரளம் என செயல்பட்டதை போன்று, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கும் தேவையான நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். புயல் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், மக்களின் வேதனைகளையும் செய்தி மற்றும் காட்சி ஊடகங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டுக்கு சோறும், நீரும் தந்த காவிரி டெல்டாவின் ஏழு மாவட்டங்கள் இன்று சோறுக்கும், நீருக்கும் பிறரை எதிர்பார்த்து நிற்கிறது. 
கஜா புயலால் தமிழக விவசாயிகள் தங்களின் விவசாயம், வீடு, நிலம் கால்நடைகள் என அனைத்தையும் இழந்து நிற்பதை கவனத்தில் கொண்டு, அவர்கள்  இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மத்திய அரசு, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசு மனித நேயத்துடன், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, வெளிப்படை தன்மையுடன் கணக்கெடுப்பு செய்து, இழப்புக்கான நியாயமான நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலர் பாலா, மாவட்ட இணைச் செயலர் கலையரசன், நகரச் செயலர் வெங்கடேசன், ஒன்றியச் செயலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT