திருவாரூர்

பணியிடத்தில் பாலியல் தொந்தரவு: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி தற்கொலை முயற்சி

DIN

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளி தம்பதி திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள், ஆட்சியரிடம் அளிக்க வைத்திருந்த மனுவில் பணியிடத்தில் பாலியல் தொந்தரவுக்குள்ளானதாக புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பழைய சந்தைபேட்டை, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (35). இவர், திருத்துறைப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி சித்ரா (28), அதே சுகாதார நிலையத்தில் பல்நோக்கு மருத்துவப் பணியாளராகப் பணிபுரிகிறார். மாற்றுத் திறனாளிகளான இருவரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்து, அங்கு மயங்கிக் கிடந்தனர். இதைப் பார்த்த போலீஸார் மற்றும் ஊழியர்கள் தம்பதியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு வந்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 
மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜிடம், சித்ரா அளிக்கவிருந்த மனுவில் தெரிவித்திருப்பது:
எனக்கு உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மூலம் மாற்றுத் திறனாளி அட்டை வழங்கப்பட்டு, ஊனத்தின் தன்மை 50 சதவீதம் என தக்க மருத்துவர்கள் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016- இல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தக்க அதிகாரிகளால் நேர்காணல் செய்யப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டேன். எனது கணவர் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், அவர் போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கூறி மருத்துவ அலுவலர்கள் தொந்தரவு செய்தனர். மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் ஆய்வு செய்து ஊனத்தின் விகிதம் சரியானது என அறிக்கை அளித்தார். ஆனால் மீண்டும் இருவருக்கும் அழைப்பாணை அனுப்பி, செப்.19 இல் இருவரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என அழைத்து, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தனர். மேலும், எவ்வளவோ எடுத்துக் கூறியும், பெண் பணியாளர்களை கொண்டு பரிசோதனை செய்யாமல், மனுவில் எழுத முடியாத அளவுக்கு வன்கொடுமையை செய்தனர். அத்துடன் இருவரையும் வேலையை விட்டு நீக்கிவிடுவதாக மிரட்டினர். எங்களை தொந்தரவு செய்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT