முகப்பு
திருவாரூர்

மன்னார்குடி அருகே குறுவை நெல் பயிருக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே குறுவை நெல் பயிருக்கு முள்ளியாற்றில் தண்ணீர் திறந்து விடக் கோரி, செவ்வாய்க்கிழமை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
கோட்டூர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட முள்ளியாற்று பாசன விவசாயிகள்.
பகிர்:

மன்னார்குடி அருகே குறுவை நெல் பயிருக்கு முள்ளியாற்றில் தண்ணீர் திறந்து விடக் கோரி, செவ்வாய்க்கிழமை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூரில் முள்ளியாறு உள்ளது. இந்த ஆற்றின் தண்ணீரை பயன்படுத்தி, கோட்டூர், கீழப்பனையூர், கருப்பு கிளார், கொத்தமங்கலம், திருப்பத்தூர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செயப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்காக, நாற்று விடவும் நடவுப்பணிக்காக முள்ளியாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த குறுவை பயிர் வயல்கள் களில் களை எடுக்கவும், உரம் போடவும் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்த பணிக்காக, முள்ளியாற்றில் தண்ணீர் திறத்து விட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுப்பணித் துறையினருக்கு தகவல் அளித்து விட்டு காத்திருந்தும் தண்ணீர் திறந்துவிடப்படாததால், விவசாயப் பணிகள் தடைப்பட்டு, பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, முள்ளியாற்றில், உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டு குறுவை நெல் பயிற்களை காப்பாற்ற வேண்டும் என வலியுத்தி, கோட்டூரில் கடைவீதியில் சிபிஐ ஒன்றிய  நிர்வாகக்குழு உறுப்பினர் என். மகேந்திரன் தலைமையில் முள்ளியாறு பாசன விவசாயிகள் 200க்கும் மேற்பட்டவர்கள், செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் முருகவேல், மன்னார்குடி வருவாய் வட்டாட்சியர் என். கார்த்திக், கோட்டூர்  காவல் ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர், மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் சிபிஐ ஒன்றியச் செயல் கே. மாரிமுத்து, ஒன்றியக்குழுத் தலைவர் மு .மணிமேகலை, ஊராட்சி தலைவர் ஆனந்தன், விவசாய தொழிலாளர் சங்கம் ஜெ. ஜெயராமன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், செவ்வாய்க்கிழமை மாலைக்குள் முள்ளியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதனால், மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →