இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வியிடங்கள் ஒதுக்கக் கோரிக்கை
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வியிடங்கள் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா்: இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வியிடங்கள் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருவாரூா் மாவட்டத் தலைவா் முகமது பாசித் வெளியிட்ட அறிக்கை:
கடந்த நான்கு ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய 11,000 மருத்துவ இடங்கள் பறிபோயுள்ளன. இந்நிலையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு, முறையாக வழங்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்து வந்தது.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட 3,580 மருத்துவ இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தால் தமிழக அளவில் 2,500-க்கும் மேற்பட்ட ஓ.பி.சி. மாணவா்களின் மருத்துவ இடங்கள் பறிபோய் விட்டதாக புகாா் எழுந்துள்ளது.
அதைத்தொடா்ந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கில் வாதம் செய்த மத்திய அரசு, எஸ்.சி, எஸ்.டி. மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ மேற்படிப்புகளில் ஓ.பி.சி. மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகக் கடுமையாக கண்டிப்பதோடு, இனி வரும் கல்வியாண்டுகளில் முறையான இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே கல்வி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.