முகப்பு
திருவாரூர்

கரோனா கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் இரா.காமராஜ் 

தமிழக அரசின் சிறப்பானத் தடுப்பு நடவடிக்கைகளால் கரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

Updated On : 6 நவம்பர், 2020 at 7:49 PM
நன்னிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டிய போது எடுத்த படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:18 PM

தமிழக அரசின் சிறப்பானத் தடுப்பு நடவடிக்கைகளால் கரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என நன்னிலத்தில் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசும்போது தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாத்திடும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு, அந்தப் பணிகளைத் திறம்பட செயல்படுத்திட அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இது போன்ற சீரிய நடவடிக்கைகளாலும், போர்க்கால அடிப்படையிலான தடுப்பு நடவடிக்கைகளினாலும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கின்ற பணிகளைத் தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டதன் காரணமாக தற்போது கரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுபோன்ற கரோனா நோய் பரவும் காலகட்டத்தில் கூட மக்களுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டப் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்து, அத்தகைய மக்கள் நலத்திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்திட அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட மூளமங்களம் கிராமத்தில், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கான புதிய விடுதிக் கட்டடம் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் கட்டப்பட உள்ளது.

Advertisement

இந்த கட்டிடம் தரைதளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் என 14000 சதுரடியில், மாணவிகள் தங்கும் அறைகள், படிக்கும் அறைகள், நவீன உணவுக் கூடம், நவீன சமையலறை, நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை, பாதுகாப்புடன் கூடிய சமையல் எரிவாயு அறை என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூபாய் 334 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதே போன்று அனைத்துக் காலகட்டத்திலும் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகின்ற மக்கள் நல அரசாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படுகின்ற அதிமுக அரசு விளங்குகிறது எனத் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் மூலமங்களம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பூஷனகுமார், உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், இளநிலைப் பொறியாளர் ஸ்ரீதரன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏஎன்ஆர். பன்னீர்செல்வம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், துணைப் பெருந்தலைவர் சிபிஜி.அன்பு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் இராம குணசேகரன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.சம்பத் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக நன்னிலம் பகுதியில் பத்தினியாபுரம், திருப்பணிப்பேட்டை, தென்குடி போன்ற பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில், நகரும் நியாய விலைக் கடைகளை அமைச்சர் துவக்கிவைத்து மக்கள் சேவைக்கு அர்ப்பணித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.