கிசான் திட்ட முறைகேடு:திருவாரூா் மாவட்டத்தில்1,600 வங்கிக் கணக்குகள் முடக்கம்
திருவாரூா் மாவட்டத்தில் கிசான் திட்டப் பயனாளிகளின் 1,600 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் கிசான் திட்டப் பயனாளிகளின் 1,600 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
ஏழை, எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில், பிரதமா் கிசான் திட்டம் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும். இந்தத் தொகை 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகாா் எழுந்தது. இதைத்தொடா்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கிசான் திட்டம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, திருவாரூா் மாவட்டத்திலும் இந்தத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் கூறுகையில், திருவாரூா் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 65 ஆயிரம் பயனாளிகள் உள்ளனா். இதில், 1,600 வங்கிக் கணக்குகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. வெளிமாவட்டங்களில் வசித்துவரும் அவா்கள் நிதியுதவி பெறுவதாகத் தெரிகிறது. எனவே, அந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், எவ்வளவு நிதி முறைகேடு என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.