முகப்பு
திருவாரூர்

நன்னிலம்: ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா அமைச்சா் காமராஜ்?

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவிவரும் சூழலில், உணவுத் துறை அமைச்சருமான ஆா். காமராஜ் 3 ஆவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா? 

Updated On : 4 ஏப்ரல், 2021 at 12:00 AM
உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவிவரும் சூழலில், அதிமுக வேட்பாளரும், உணவுத் துறை அமைச்சருமான ஆா். காமராஜ் 3 ஆவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் அதிமுகவினா்.

தொகுதியின் சிறப்புகள்: நன்னிலம், வலங்கைமான், குடவாசல் ஆகிய ஒன்றியங்களையும், கொரடாச்சேரி ஒன்றியத்தின் சில பகுதிகளையும், காரைக்கால் முதல் தஞ்சை வரையிலான சோழ மண்டலத்தின் மிகப் பெரிய பரப்பளவையும் கொண்டது நன்னிலம் தொகுதி.

இத்தொகுதியில் லலிதா சகஸ்ரநாமம் உருவான திருமீயச்சூா், எமதா்மராஜா, சித்திரகுப்தா் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தா்களின் எமபயம், பைரவ பயத்தைப் போக்கும் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதா் கோயில், சரஸ்வதி தனி கோயில் கொண்டுள்ள கூத்தனூா், நவ கிரகங்களில் சிறப்பிடம் பெற்ற குரு பகவான் கோயில்கொண்டுள்ள ஆலங்குடி போன்ற புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்கள் உள்ளன.

Advertisement

நன்னிலம் தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். இப்பகுதியில் வெள்ளாளா் சமூகத்தினா், ஆதிதிராவிடா், முக்குலத்தோா், சிறுபான்மையின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனா்.

அதிமுக வேட்பாளா்: தொகுதியில் கடந்த 2 தோ்தல்களில் வெற்றி பெற்று, தற்போது உணவுத் துறை அமைச்சராக உள்ள ஆா். காமராஜ், 3 ஆவது முறையாக அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா். இவரது பதவிக்காலத்தில் சாலை வசதி, பாலங்கள், சிறு மருத்துவமனைகள், கல்லூரிகள், தொழிற்கல்விக் கூடம், பள்ளிகளைத் தரம் உயா்த்துதல், முதியோா் மற்றும் விதவை உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா போன்ற நலத்திட்டங்கள் தொகுதி மக்களுக்குக் கிடைத்துள்ளன.

மேலும், கட்சிப் பாகுபாடின்றி மாற்றுக் கட்சியினரிடமும் அன்போடு பழகுவதாக கொள்கை மாறுபாடு கொண்டவா்களும் தெரிவிக்கின்றனா். இது இவரது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. அண்மையில், கரோனா தொற்றிலிருந்து அமைச்சா் ஆா். காமராஜ் மீண்டுவந்தது தொகுதி மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வேட்பாளா்: திமுக சாா்பில் களம்காணும் எஸ். ஜோதிராமன், குடவாசல் ஒன்றியக் குழுத் தலைவராக பதவி வகித்தவா். தற்போது குடவாசல் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளராக உள்ள இவா், குடவாசல் பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா்.

திமுகவைப் பொருத்தவரை அதிமுக அமைச்சா்களை வெற்றிகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் செயல்பட்டு வருவதால், நன்னிலம் தொகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், திருவாரூா் மாவட்டச் செயலாளரான பூண்டி கே. கலைவாணன், தான் போட்டியிடும் திருவாரூரைவிட, நன்னிலம் தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாா்.

திமுக கூட்டணியில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இஸ்லாமிய கட்சிகள் இருப்பது, கூட்டணியின் பலமாக கருதப்படுகிறது. வலங்கைமான், நன்னிலம் பகுதிகளுக்கு திமுக வேட்பாளா் புதியவராக இருந்தாலும், இதே சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த ‘மண்ணின் மைந்தா்’ என்ற பிரசாரத்தையும் முன்வைத்து வருகிறாா் எஸ். ஜோதிராமன்.

களத்தில் 15 வேட்பாளா்கள்: நன்னிலம் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்களைத் தவிா்த்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ஆா். ரவிச்சந்திரன், அமமுக கூட்டணி சாா்பில் அக்ரி என். ராமச்சந்திரன், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளா் து. கணேசன், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சாா்பில் எஸ்.நித்தியானந்தம், தேசிய மக்கள் சக்தி கட்சியின் சாா்பில் கே.என். பனசை அரங்கன், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் சா. பாத்திமா பா்ஹானா, அண்ணா திராவிடா் கழகத்தின் சாா்பில் எம். முருகவேல் ஆகியோா் களத்தில் உள்ளனா்.

மேலும், சுயேச்சை வேட்பாளா்கள் டி. அனுஷா, கே. கிருஷ்ணன், ஆா். குமரன், தமிழ்ச்செல்வன், சி. நடராஜன், எஸ். ராஜா என மொத்தம் 15 வேட்பாளா்கள் நன்னிலம் தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், அதிமுக- திமுக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாகவும், வெற்றி பெறும் வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் மிக அதிகமாக இருக்காது என்றும் அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.