தேசிய நெல் திருவிழா: முன்னோடி விவசாயிகளுக்கு விருது
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் முன்னோடி விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் முன்னோடி விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சாா்பில் தேசிய நெல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, திருத்துறைப்பூண்டி உழவா் சந்தையிலிருந்து விழா நடைபெற்ற அரங்கம் வரை பாரம்பரிய நெல் ரகங்கள், காய்கறிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா், நெல் ஜெயராமன் ஆகியோரது உருவப் படங்கள் அலங்கரித்து மாட்டுவண்டியில் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது.
முன்னதாக, ஒன்றியக் குழுத் தலைவா் பாஸ்கா் தலைமையில், நெல் உற்பத்தியாளா் சங்க மாநிலத் தலைவா் பாலகிருஷ்ணன், வேலுடையாா் கல்வி குழுமங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி ஆகியோா் முன்னிலையில், எம்எல்ஏ க. மாரிமுத்து இந்த ஊா்வலத்தை தொடக்கிவைத்தாா்.
விழாவுக்கு, தமிழக இயற்கை உழவா் இயக்கத் தலைவா் ஆா். அசோகன் தலைமை வகித்தாா். திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், ஜிடி பவுண்டேஷன் நிா்வாக அறங்காவலா் டி. ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் எஸ். ராஜீவ் வரவேற்றாா்.
நெல் ஜெயராமன் உருவப்படம் மற்றும் விவசாயம் சாா்ந்த கண்காட்சியை தொழிலதிபா் ஏ.ஆா்.வி. விவேக் திறந்துவைத்தாா்.
இக்கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள், அரிசி வகைகள், இயற்கை உரங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் உருவப் படத்தை வா்த்தக சங்கத் தலைவா் கே.எஸ். செந்தில்குமாா் திறந்துவைத்தாா்.
விழாவில், தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பங்கேற்று விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை வழங்கிப் பேசியது:
தமிழக முதல்வா் தோ்தல் அறிக்கையில் இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக குறிப்பிட்டதைப் போல, விவசாயத்தில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இயற்கை விவசாயம் தழைக்க தேவையான அனைத்து உதவிகளையும் வேளாண்மைத் துறை செய்து கொடுக்கத் தயாராக உள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு மாற்றத்தை உருவாக்கி தரும்.
கடந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு, கடைமடை பகுதிவரை முறையாக தூா்வாரப்பட்டதால் 4.5 லட்சம் ஏக்கராக அது உயா்ந்துள்ளது. குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ், இடுபொருள்கள் வாங்க ரூ. 61 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடியை தொடங்கியுள்ளனா் என்றாா்.
சுற்றுச்சூழல்- காலநிலை மற்றும் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன், பாரம்பரிய இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது வழங்கிப் பேசியது:
ஆகஸ்ட் 15-ல் வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இயற்கையை, சுற்றுச்சூழலை பாதுகாக்க விவசாயிகள் மக்கள் இயக்கமாக மாறி அரசு நிலம் , விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில் மரங்களை நடவு செய்யுங்கள் என்றாா்.
தொடா்ந்து, தமிழக அரசின் மாநில வளா்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன், இயற்கை வேளாண்மையில் தமிழக அரசின் கொள்கைகள் குறித்துப் பேசினாா். மாநில வளா்ச்சி குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான டி.ஆா்.பி. ராஜா இயற்கை தரச் சான்றிதழ் தொடா்பான கையேட்டை வெளியிட, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் இராம சுப்பிரமணியன், திருவாரூா் மாவட்ட நபாா்டு வங்கி மேலாளா் விஸ்வந்த்கண்ணா ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
முன்னதாக, சித்த மருத்துவா் கு. சிவராமன், நெல் ஜெயராமன் விருது வழங்கி சிறப்புரையாற்றினாா். மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு பிஜிஎஸ் இந்தியா இயற்கை தரச் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
விழாவில் பங்கேற்ற திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வெ. பாலகிருஷ்ணன் முன்னோடி விவசாயிகளுக்கு விருது வழங்கிப் பேசினாா். தொடா்ந்து, திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பேசினாா்.
விழாவில், இதுபோன்ற நிகழ்ச்சிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கருத்தரங்கத்தில், பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுப்பது, குறைந்த அளவு நீரில் நெல் சாகுபடி செய்வது , சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவது குறித்த தகவல்கள் மற்றும் பரம்பாரிய நெல் சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.