நன்னிலம்: பழுதடைந்தக் கட்டடத்தில் இயங்கும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம்
பழுதடைந்தக் கட்டடத்தில் இயங்கும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட நன்னிலம் வட்டார அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிட சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
நன்னிலம்: பழுதடைந்தக் கட்டடத்தில் இயங்கும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட நன்னிலம் வட்டார அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிட சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக சிஐடியு திருவாரூர் மாவட்டச் செயலாளர் செயலாளர் டி. முருகையன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள தூத்துக்குடி கிராமத்தில் உள்ள அக்ரஹாரத் தெருவில் நன்னிலம் வட்டாரக் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் நன்னிலம் வட்டாரத்திலுள்ள 200க்கும் அதிகமான அங்கன்வாடி மைய ஊழியர்களின் தலைமை அலுவலகமாகவும், பயிற்சி மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
அலுவலகத்தில் ஐந்துக்கு மேற்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து தினசரி பணிபுரிந்து வருகின்றனர். இந்த அலுவலகக் கட்டம் 2002ஆம் ஆண்டு 5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தொடர்ந்து கட்டடத்தை முறையாகப் பராமரிக்காதக் காரணத்தினால், கட்டடம் கட்டிய இருபதாண்டுகளுக்குள் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து மழைக் காலங்களில் மழைநீர் கட்டடத்தின் உள்ளே கசிந்து அலுவலர்கள் பணியாற்ற முடியாத நிலையில் உள்ளது.
அதேபோல மின்சார இணைப்புகளும் பழுதாகி, மின்சார வயர்கள் அறுந்து ஆங்காங்கேத் தொங்கிக் கொண்டுள்ளது. கட்டிடத்தில் உள்ள இரும்பு கேட், கதவுகள் மற்றும் ஜன்னல் கம்பிகளைத் தொடும்போது மின்சாரம் தாக்கக்கூடிய நிலையில் ஷாக் அடிப்பதாக அங்கு பணியாற்றும் அலுவலர்கள் கூறுகின்றனர்.
அங்கு பணியாற்றும் அலுவலர்களும், பயிற்சி மற்றும் அலுவலக வேலைகளுக்காக வருகின்ற நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்களும் உயிருக்குப் பாதுகாப்பின்றி, உயிர் பயத்துடன் தினசரி பணியாற்ற வேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் உள்ளனர். மின்சார இணைப்புகள் சரியாக இல்லாத காரணத்தினால் இரவு, பகல் எந்நேரத்திலும் மின்விளக்குகள் எரியாத ஒரு நிலையில் அலுவலர்கள் இருட்டில் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அலுவலகத்தில் உள்ள நாற்காலி, மேஜை அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளது. எனவே மாவட்ட ஆட்சித்தலைவர், நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் வந்து செல்லக்கூடிய அலுவலகமாக உள்ள நன்னிலம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தைப் புதிதாகக் கட்டி தருவதற்கும், புதிய கட்டடம் கட்டும் வரை, வேறு கட்டடத்தில் இயங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.