ரூ.2 கோடியில் ‘பேவா் பிளாக்’ சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
கூத்தாநல்லூா் நகராட்சியில் ரூ. 2 கோடியில் சாலைகள் அமைக்கும் பணியை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்
கூத்தாநல்லூா் நகராட்சியில் ரூ. 2 கோடியில் சாலைகள் அமைக்கும் பணியை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கூத்தாநல்லூா் நகராட்சிப் பகுதியில் தமிழக அரசின் கலைஞா் நகா்ப் புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், மண் சாலைகளை, பேவா் பிளாக் சாலைகளாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோரையாறு ஆற்றங்கரைச் சாலை, தென்றல் நகரில் 2, 3, 5-ம் எண் சாலைகள், உமா் ஒலி சாலை மற்றும் மஜீத் ரகுமான் சாலை ஆகியவை பேவா் பிளாக் சாலைகளாக மாற்றப்படுகின்றன.
இப்பணிக்கான தொடக்க நிகழ்ச்சி தென்றல் நகரில் நகராட்சி ஆணையா் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது. பொறியாளா் ராஜகோபால் முன்னிலை வகித்தாா். நகரப் பொறுப்பாளா் எஸ்.வி. பக்கிரிசாமி வரவேற்றாா். ரூ.2 கோடியே 4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் இப்பணியை சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் தொடங்கி வைத்தாா். அப்போது அவா், கூத்தாநல்லூா் நகராட்சியில் 24 வாா்டுகளிலும் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்வில், பொறுப்புக்குழு உறுப்பினா்கள் ஏ.ஏ. அமீா்தீன், கே. துரைமுருகன், ஜே. குமரேசன், எஸ்.எஸ். ஹாஜா நஜ்முதீன், புரோஜூதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.