கூத்தாநல்லூர்: கமலாபுரம் பிரதான சாலையில் சோதனைச் சாவடி திறப்பு
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், கமலாபுரம் பிரதானச் சாலையில் சோதனைச் சாவடி மையம் திறக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், கமலாபுரம் பிரதானச் சாலையில் சோதனைச் சாவடி மையம் திறக்கப்பட்டது.
கூத்தாநல்லூர் வட்டம், வடபாதிமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட கமலாபுரத்தில், காவல் துறை சார்பில், திருவாரூர் - மன்னார்குடி பிரதானச் சாலையில் வாகன சோதனைச் சாவடி அமைக்கப்பட, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எம்.துரை ஆலோசனை வழங்கினார்.
அதன் பேரில், கமலாபுரம் பிரதானச் சாலையில் வாகன சோதனைச் சாவடி மையத் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை தலைமை வகித்தார்.ஸ்ரீ நாராயணி நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.தினேஷ்குமார் வரவேற்றார்.
வாகன சோதனைச் சாவடி மையத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர், “பொதுமக்கள் நலன் கருதி குற்றத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைக்காக, 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில், புதிய சோதனைச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வடபாதிமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட, வடபாதிமங்கலம், உச்சிவாடி, கிளியனூர், கமலாபுரம், பாரதி மூலங்குடி, கப்பூர், புனவாசல், பூந்தாழங்குடி மற்றும் கீழமணலி உள்ளிட்ட 17 தாய் கிராமங்கள், 47 கிளை கிராமங்கள் என 64 கிராமங்கள் உள்ளன.
பொதுமக்கள் காவல் துறையுடன் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். உங்கள் கிராமங்களுக்கு சந்தேகப்படும்படியாக யார் வந்தாலும் தயக்கம் இல்லா உடனே காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். வாகனங்களில் செல்பவர்கள் முகக்கவசத்துடன், தலைக்கவசமும் கட்டாயம் அணிய வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.