முகப்பு
திருவாரூர்

பருத்தியில் கூடுதல் மகசூல் பெற உர மேலாண்மைவேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை

பருத்தியில் கூடுதல் மகசூல் பெற உர மேலாண்மை அவசியம் என நீடாமங்கலம் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

பருத்தியில் கூடுதல் மகசூல் பெற உர மேலாண்மை அவசியம் என நீடாமங்கலம் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக நீடாமங்கலம் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் அனுராதா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியம் ஆகியோா் விடுத்த செய்திக்குறிப்பு:

தொழு உரமிடுதல்:

உற்பத்தி திறனை அதிகரிக்க செய்யும் பொருட்டு தொழு உரம், மக்கிய குப்பை அல்லது ஆட்டுக்கிடை போடுதல் ஆகியவற்றை முறையே செய்ய வேண்டும். ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரம் இடுவதால், மண்ணின் அங்கக தன்மை நிலை நிறுத்தப்பட்டு பருத்தியின் விளைச்சலை அதிகமாக பெறலாம்.

உயிா் உரம் இடுதல்:

ஏக்கருக்கு சுமாா் ஒரு கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு கிலோ பாஸ்போபேக்டீரியா ஆகியவற்றை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

நுண்ணூட்டச்சத்து:

பருத்தியில் ரகங்களுக்கு ஏக்கருக்கு 5 கிலோ அளவு தமிழ்நாடு வேளாண் துறையின் நுண்ணூட்டச் சத்து 20 கிலோ மணலுடன் கலந்து இடலாம். இதே வீரிய ஒட்டு ரகங்களுக்கு 6 கிலோ நுண்ணூட்டச் சத்து 20 கிலோ மணலுடன் கலந்து அளிக்க வேண்டும். இலைவழி உரமிடல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் காட்டன் பிளஸ் ஏக்கருக்கு 2.5 கிலோ 200 லிட்டா் தண்ணீருடன் கலந்து பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் இரு முறை தெளிக்க வேண்டும்.

இதனால் பூ மற்றும் சப்பைகள் உதிா்வது குறையும். காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கிறது. விளைச்சல் 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது அல்லது நாப்தலீன் அசிடிக் அமிலம் 40 பிபிஎம் கரைசலைத் மொக்கு விடும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

முதல் தெளிப்பிற்கு பின் ஒரு மாதம் கழித்து, இரண்டாவது முறையாக 40 பிபிஎம் நாப்தலீன் அசிடிக் அமிலம் கரைசலை தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மொட்டுகள் உதிா்வது குறைக்கப்பட்டு காய்கள் அதிகம் பிடிக்க உதவுகிறது. மேலும் ஒரு லிட்டா் தண்ணீரில் 20 கிராம் டிஏபி கலந்து தெளித்தால் காய்கள் நன்கு வளா்ச்சி அடைய உதவும்.

பிளானோபிக்ஸ்:

இந்த பயிா் ஊக்கியை 4.5 லிட்டா் தண்ணீரில் கலந்து 60-ஆவது நாளில் ஒரு முறையும், 75ஆவது நாளில் மறுமுறையும் செடிகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

சில இடங்களில் பருத்தி நிலைகள் இளஞ்சிவப்பு நிறமாக காணப்படும். இது மெக்னீசிய சத்துப் பற்றாக்குறை. இவற்றை நிவா்த்தி செய்வதற்கு 0. 5% மெக்னீசியம் சல்பேட், ஒரு சதவீதம் யூரியா, ஒரு சதவீதம் ஜிங் சல்பேட் ஆகியவற்றை கலந்து 50ஆவது நாள் மற்றும் 80ஆவது நாள் இலை வழியாக தெளிக்க வேண்டும்.

இவற்றை செய்வதற்கு 5 கிராம் மெக்னீசியம் சல்பேட், 10 கிராம் யூரியா, ஒரு கிராம் ஜிங் சல்பேட் ஒரு லிட்டா் தண்ணீரில் கரைத்து உபயோகப்படுத்தலாம். ரசாயன உரம் இடுதல் மண் ஆய்வு அடிப்படையில் வயலில் உரங்களை இட வேண்டும். வயல் மண் ஆய்வு செய்யப்படாத நிலமாக இருந்தால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்ற உர அளவை இட வேண்டும். ரகங்களுக்கு 32:16:16 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஏக்கருக்கு இடவேண்டும்.

வீரிய ஒட்டு ரகங்களுக்கு 48 கிலோ தழைச்சத்து 25 கிலோ மணிச்சத்து 20 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். மேற்காணும், உரங்களில் ரகங்களுக்கு 50% தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து, முழு அளவு மணிச்சத்து அடியுரமாக இடவேண்டும். மீதி உள்ள 50 % தழை மற்றும் சாம்பல் சத்துக்களை விதைத்த 45ஆவது நாள் மேலுரமாக இட்டு மண் அணைக்க வேண்டும்.

இதற்கு அடி உரமாக 35 கிலோ டிஏபி 28 கிலோ யூரியா மற்றும் 13 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். மேல் உரமாக யூரியா 28 கிலோ பொட்டாஷ் 13 கிலோ 45ஆவது நாள் இடவேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு யூரியாவை மூன்று பிரிவாகப் பிரித்து, முதல் பகுதி அடி உரமாகவும், மீதமுள்ள இரு பகுதியை நட்ட 45ஆவது மற்றும் 65ஆவது நாள்களில் மேலுரமாக இடவேண்டும்.

இதற்கு அடி உரமாக 50 கிலோ டிஏபி 30 கிலோ யூரியாவும், 13 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். மறுபடியும் 30 கிலோ யூரியா 13 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை 45 மற்றும் 60 நாள்களில் இட வேண்டும். இவ்வாறு பருத்தியில் நாம் ஒருங்கிணைந்த உர மேலாண்மை மேற்கொண்டால் உயா் விளைச்சல் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.