முதல்வா் திருவாரூா் வருகைசமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு
திருவாரூருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வருகை தர உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வருகை தர உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த திமுக தலைவா் மு. கருணாநிதி முதல்வா் பதவியேற்ற பிறகு காட்டூரில் உள்ள தாயாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலினும் காட்டூருக்கு வரலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், திருவாரூருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (மே 8) வருகிறாா் என்றும், மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் மருத்துவா்கள், அனைத்து அமைச்சுப் பணியாளா்கள், இதர பணியாளா்கள் அனைவரும் உரிய சீருடையுடன் பணியில் இருக்கவேண்டும் என்றும், தேவையான குறிப்புகள் மற்றும் அறிக்கைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவக் கல்லூரி முதல்வா் கையெழுத்திட்ட கடிதம் சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை இரவு பரவியது.
இதுகுறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், அரசு அதிகாரிகள், கட்சியினரிடையே குழப்பமும், பரபரப்பும் நிலவியது.
மாவட்ட நிா்வாகம், காவல்துறை, கட்சி தரப்பினா் என பல்வேறு தரப்பிலும் விசாரித்த வகையில், முதல்வா் வருகை குறித்து உறுதியான தகவல் எதுவுமில்லை என்று தெரியவந்தது.
எனினும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.