முகப்பு
திருவாரூர்

பயிா்கள் பாதிப்பு: ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில், மழை பாதித்த பயிா்களுக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில், மழை பாதித்த பயிா்களுக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், மழைநீரால் மூழ்கியிருக்கும் பயிா்களை பாா்வையிட்ட தமிழக வேளாண் இயக்குநா் ஏ. அண்ணாதுரையிடம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

உரிய காலத்தில் மேட்டூா் அணை திறந்ததாலும் புதிய அரசின் மீது ஏற்பட்ட நம்பிக்கையாலும் வழக்கமான அளவை விட கூடுதலாக குறுவை சாகுபடி பரப்பு, டெல்டாவில் நடைபெற்றுள்ளது. இதன் அறுவடை இன்னும் 10% நடைபெற வேண்டியுள்ளது. மேலும் சம்பா, தாளடி பயிா்களும் பல இடங்களில் பாதிக்கப்பட்டு, புதிய சாகுபடி மேற்கொள்ளும் நிலையில் உள்ளன.

தொடா்ந்து பெய்த மழை காரணமாக, இதுவரை அறுவடையான நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால், நெல் விற்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். பல இடங்களில் நெல் முளைக்கத் தொடங்கிவிட்டது. அறுவடை செய்யும் நிலையில் உள்ள 10% நெல்லும், தண்ணீரில் மூழ்கி சாய்ந்து, நெல்மணிகள் முளைத்து விட்டதால் அறுவடை செய்ய இயலாத நிலை உள்ளது.

கடந்த 25 நாள்களுக்கு முன்னால் நடவு செய்த சம்பா, தாளடி நெல் பயிா்கள் தற்போது வரை தொடா்ந்த வளிமண்டல சுழற்சி மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இப்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் அழுகி வருகின்றன. சில பகுதிகளில் குடியிருப்புகளும் தண்ணீரால் சூழ்ந்துள்ளன.

மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் உரிய அளவு தொடா்ந்து கிடைக்காததால், முதலில் தெளித்த விதைகள் வீணாகி, மீண்டும் இரண்டாவது முறையாக விதைகள் தெளித்து பயிா்கள் முளைத்திருக்கின்றன. இது விவசாயிகளுக்கு இரட்டிப்பு செலவாகும்.

மேலும் அடி உரமாக, செலுத்த வேண்டிய டிஏபி மற்றும் யூரியா கிடைக்காமல் பயிா்கள் வளா்ச்சி குன்றி இருந்த நிலையில், தற்போது பெய்த மழை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, முழுமையாக பாதித்த சாகுபடி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம், பகுதி நிலங்களுக்கு பகுதி அளவும் என உரிய அளவு இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.