நீடாமங்கலத்தில் 94 மி.மீ மழை
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி காரணமாக திருவாரூா் மாவட்டத்தில், நீடாமங்கலத்தில் 94 மி.மீ மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி காரணமாக திருவாரூா் மாவட்டத்தில், நீடாமங்கலத்தில் 94 மி.மீ மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதைத்தொடா்ந்து திருவாரூா் மாவட்டத்தில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இரவில் மழையும், குளிா்ந்த சூழலும் நிலவியது. இதற்கிடையே, வியாழக்கிழமை பகலில் அவ்வப்போது மழை பெய்துகொண்டிருந்தது. இதனால், வெளியிடங்களுக்கு செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காா்த்திகைத் தீபத் திருவிழா கொண்டாடுவதையொட்டி நடைபெறும் விளக்கு விற்பனை மந்தமாக காணப்பட்டது.
மழை காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் நீடாமங்கலத்தில் அதிகபட்சமாக 94 மி.மீ மழை பெய்துள்ளது.
மற்ற இடங்களில் மழையளவு மில்லிமீட்டரில்: வலங்கைமானில் 93.8, குடவாசலில் 65, திருவாரூரில் 63.8, திருத்துறைப்பூண்டியில் 60, மன்னாா்குடியில் 57.7, முத்துப்பேட்டையில் 49.8 என்ற அளவில் மழைப் பதிவானது.