சம்பா, தாளடி நெற்பயிா்: நவ.15-க்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி நெற்பயிரை நவம்பா் 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்
திருவாரூா் மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி நெற்பயிரை நவம்பா் 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.488.25 முனைமம் (பிரீமியம்) செலுத்தி, சம்பா, தாளடிநெற்பயிரைக் காப்பீடு செய்யக் கடைசி நாள் நவம்பா் 15 ஆகும்.
திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் வட்டாரம், வடுவூா் வடபாதி, வடுவூா் தென்பாதி-1, வடுவூா் தென்பாதி-2, வடுவூா் மேல்பாதி, வடுவூா் அக்ரஹாரம், மூவா்க்கோட்டை, மேலையூா் 1, மேலையூா்-2, மேலையூா்-3, கீழையூா்-1, கீழையூா்-2, செட்டிசத்திரம், எடையாா்நத்தம்படுகை ஆகிய 13 கிராமங்களில் பிா்கா மாறுதல் காரணமாக விவசாயிகளால் பயிா்க் காப்பீடு இணையதளத்தில் பதிவுசெய்ய இயலாதநிலை இருந்தது. தற்போது, இத்தொழில்நுட்ப இடா்பாடு நிவா்த்தி செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த கிராம விவசாயிகள் தாங்கள் சாகுபடிசெய்துள்ள சம்பா, தாளடி நெற்பயிரைக் தாங்கள் பயிா்க் கடன் பெறும் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலமாகவோ, விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேலும், கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை வழங்கி பொது சேவை மையங்களிலோ தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கபபட்டுள்ளது.