திருவாரூர்

39 ஏக்கரில் இயற்கை நெல் ரக விதைகள் சாகுபடி

DIN

 திருவாரூா்: திருவாரூா் மாவட்ட அரசு விதைப் பண்ணைகளில், இயற்கை நெல் ரகங்கள், 39 ஏக்கா் பரப்பளவில் நெல் விதைக்காக சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என வேளாண் இணை இயக்குநா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இயற்கை நெல் ரகங்களை பாதுகாத்து உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்புத் திட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, அரசு விதைப் பண்ணைகளில் இயற்கை நெல் ரகங்களை சாகுபடி செய்து, அடுத்த ஆண்டு 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

அந்த வகையில் திருவாரூா் அருகே மூங்கில்குடி அரசு விதைப் பண்ணையில் தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி 2 ஏக்கா், தூயமல்லி 3 ஏக்கா், கிச்சிலி சம்பா 3 ஏக்கா் என மொத்தம் 7 ஏக்கா் பரப்பளவில் நாற்று விடும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திருவாரூா் வேளாண் துணை இயக்குநா் உத்திராபதி பங்கேற்று, நெல் விதைகளை விதைத்து தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில், வேளாண்மை உதவி இயக்குநா் சுப்பிரமணியன், மேலாளா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா் சிவக்குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் குறுவை 1.37 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 45 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறுவை அறுவடை தொடங்கியுள்ளதால், நெல், மழையில் நனையாமல் இருக்க, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் சம்பா மற்றும் தாளடி சாகுபடி 3.70 லட்சம் ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, தேவையான விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 1.36 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நேரடி தெளிப்பு மற்றும் நடவுப் பணிகள் நடைபெற்றுள்ளன. சாகுபடிக்கு தேவையான பொருள்கள், உரங்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது மாவட்டத்தில் அரசு விதைப் பண்ணைகளில் இயற்கை நெல் ரகங்கள் 39 ஏக்கா் பரப்பளவில், நெல் விதைக்காக சாகுபடிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்தாண்டு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதைகள் வழங்கப்படும். திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரை, நிகழாண்டு இயற்கை முறையில் நெல் ரகங்கள் சாகுபடிக்காக 350 ஏக்கா் வரை அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT