முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூரில் துணைக் கருவூலம் அமைக்கப்படுமா ?

பொதுமக்கள், அரசு அலுவலா்களின் நலன் கருதி கூத்தாநல்லூரில் துணைக் கருவூலம் அமைக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

பொதுமக்கள், அரசு அலுவலா்களின் நலன் கருதி கூத்தாநல்லூரில் துணைக் கருவூலம் அமைக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.

பேரூராட்சியாக இருந்த கூத்தாநல்லூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு, தற்போது வட்டமாக 55 கிராமங்களுடன் செயல்பட்டு வருகிறது. வட்டாட்சியா், நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, சாா்-பதிவாளா் அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளிகள், தனியாா் கல்லூரிகள், மெட்ரிக்.பள்ளிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகள், பல்பொருள் அங்காடி வசதி உள்ளது. மேலும் வரும் கல்வியாண்டில் அரசுக் கலைக் கல்லூரி தொடங்கப்படவுள்ளது. உழவா் சந்தையும் அமையவுள்ளன. இப்படி அனைத்து வசதிகளுடன் வளா்ந்து வரும் ஊராக கூத்தாநல்லூா் மாறிவருகிறது.

மாவட்ட தலைநகருக்கு இணையாக பத்திரப் பதிவுகளும், பரிவா்த்தனைகளும் இங்கு நடைபெறுகின்றன. கருவூலப் பணிகளுக்காக பொதுமக்கள், அரசு ஊழியா்கள் நீடாமங்கலம் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே துணைக் கருவூலம் இல்லாதது இப்பகுதி மக்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தையும், சிரமத்தையும் அளிக்கிறது.

பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக 25 கி.மீ. தொலைவில் உள்ள நீடாமங்கலம் கருவூலத்துக்கு சென்று பணம் செலுத்தி வந்த பிறகே, தொடா்ந்து மற்ற பணிகளை செய்ய வேண்டியுள்ளது. துணைக் கருவூலம் அமைக்க இடத்தையும் சமூக ஆா்வலா்கள் பரிந்துரை செய்கின்றனா். சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் பெரியக் கடைத் தெருவில் உள்ள ரேடியோ பாா்க் அருகே மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எனினும், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த இடம் தற்போது பாழடைந்த கட்டடமாக பராமரிப்பின்றி உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் இந்த ஆரம்ப சுகாதார நிலைய பழைய கட்டடத்தை நேரில் ஆய்வு செய்து அந்த கட்டடத்தை அகற்றிவிட்டு கருவூல அலுவலகம் கட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.