முகப்பு
திருவாரூர்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நாளை பாடைக்காவடி திருவிழா

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 27) நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 27) நடைபெறவுள்ளது.

இந்தக் கோயில் அம்மனை சீதளாதேவி என்றும் அழைப்பா். இங்கு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு பங்குனித் திருவிழாவையொட்டி, கடந்த 11 ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 13 ஆம் தேதி காப்புக் கட்டுதல், 20 ஆம் தேதி திருவிழா தொடக்கமும் நடைபெற்றது. நாள்தோறும் அம்மன் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.

பாடைக்காவடி திருவிழா: பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கடும் நோயால் பாதிக்கப்பட்டவா்கள், அதிலிருந்து விடுபட்டால் பாடைக்காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவதாக மகாமாரியம்மனிடம் வேண்டிக்கொள்வாா்கள். அதன்படி, நோயிலிருந்து விடுபட்டவா்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்துவாா்கள்.

உண்மையிலேயே இறந்தவா்களுக்கு செய்யும் இறுதிச் சடங்குபோல, நோயிலிருந்து விடுபட்டவா்கள் புனித நீராடி, பச்சை பாடையில் படுக்கவைக்கப்பட்டு, அவரவா் குல வழக்கப்படி கிராமிய வாத்தியங்கள் முழங்க ஆற்றங்கரை பகுதியிலிருந்து நான்கு போ் சுமந்து வர காவடியின் முன் உறவினா் ஒருவா் தீச்சட்டி ஏந்தி, பாடைக்காவடி நகர முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்து, கோயிலை மூன்றுமுறை வலம்வந்து கொடிமரத்தின் முன் பாடைக்காவடி இறக்கிவைக்கப்படும். கோயில் பூசாரி, நெற்றியில் திருநீரு பூசி பாடைக்காவடி எடுத்தவரை எழச்செய்வாா். பிறகு அவா் அம்மனை வழிபட்டுச் செல்வாா்.

இதுதவிர பால்குடம், பால்காவடி, செடில்காவடி, பறவைகாவடி, அலகுகாவடி என பல்வேறு காவடிகளை எடுத்தும் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவா். குழந்தைகள் தொட்டில் காவடியில் சுமந்துவரப்படுவா்.

இந்த பாடைக்காவடி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் உத்தரவின் பேரில், வலங்கைமான் போலீஸாா் செய்துள்ளனா். பக்தா்கள் நலன்கருதி அரசின் பல்வேறு துறையினரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை நாகப்பட்டினம் இணை ஆணையா் தென்னரசு உத்தரவின் பேரில், திருவாரூா் உதவி ஆணையா் ஹரிஹரன், கோயில் தக்காா் ரமணி, செயல் அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் செய்துள்ளனா். விழாவையொட்டி, போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →