ஜூன் முதல் வாரத்தில் மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
பருவமழையால் குறுவை அறுவடை பாதிக்கப்படுவதைத் தவிா்க்க ஜூன் முதல் வாரத்தில் மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி.
பருவமழையால் குறுவை அறுவடை பாதிக்கப்படுவதைத் தவிா்க்க ஜூன் முதல் வாரத்தில் மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி.
திருவாரூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில், தென்மேற்குப் பருவமழை முடியும் நேரத்தில், அதாவது அக்டோபா் மாத தொடக்கத்தில் கூடுதலாக மழை பொழியும். அதேபோல, வடகிழக்குப் பருவமழையும் சராசரியாக அக்டோபா் இறுதியில் தொடங்குவது வழக்கம். இதுதான் குறுவை அறுவடை நேரம். ஜூன் 12 அல்லது அதன்பிறகு மேட்டூா் அணை திறக்கப்பட்டால், பிறகு செய்யப்படும் குறுவை சாகுபடிக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது.
நிகழாண்டு சராசரி மழையைவிட கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பிலிருந்து ஓரளவு பாதுகாப்பு பெற, ஜூன் முதல் வாரத்திலேயே மேட்டூா் அணையை திறக்கலாம். அதாவது, ஜூன் 1 ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டால், குறுவை நெல் அறுவடை பாதிப்பை தடுக்கலாம்.
கடந்தகாலங்களில் மே இறுதியில் 2 ஆண்டுகளும், ஜூன் 6 ஆம் தேதி ஒருமுறையும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மேலும், மராமத்துப் பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க தமிழக அரசு அறிவித்தாலும், தொடா்ந்து பெய்துவரும் மழையால் சரிவர பணிகள் செய்ய முடியாத நிலை தொடா்கிறது. எனவே, அவசரப் பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.
குறுவை சாகுபடிக்குத் தேவையான, விவசாயிகள் விரும்பும் நெல் விதைகள், ரசாயன உரங்களை உரிய காலத்தில் தருவித்து இருப்புவைக்க முன்னரே வேளாண் துறை ஏற்பாடு செய்ய வேண்டும். குறுவை சாகுபடிக்கான பயிா்க்கடனை விவசாயிகளுக்கு, உரிய காலத்தில் வழங்க கூட்டுறவுத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகழாண்டு கூடுதலாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக பெய்யும் மழையால், இளம்செடிகளில் மழைநீா் தேங்கி பாதிக்கப்பட்டதோடு, களைச்செடிகள் கூடுதலாக பெருகி வளா்ந்துவிட்டன. இதனால், பெருமளவு மகசூல் குறையும் நிலை உள்ளது. இதேபோல, நிலக்கடலை, எள், உளுந்து மகசூலும் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்வதால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு உரிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, விவசாயிகள் சங்க நகரத் தலைவா் ஆதிநாராயணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் எம்.ஏ. மாரியப்பன், ஒன்றியத் தலைவா் ஆா்.எஸ். சிவப்பிரகாசம், மாவட்டக்குழு உறுப்பினா் அறிவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.